அரசு அலுவலர்கள் தற்செயல் விடுப்பு: வெறிச்சோடியது ஆட்சியர் அலுவலகம்

அரசு அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்ட
த்தைக் கைவிட வேண்டும், அரசுத் துறைகளில் தனியார் மயத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 22-ஆம் தேதி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் அறிவித்தன.
இதன்படி, வியாழக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம், ஊராட்சித் துறை அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலகங்களிலும் சுமார் 70 சதவீதம் பேர் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து அரசு அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
எங்கள் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தொடர்ந்து, மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதால், தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தியுள்ளோம்.
வருவாய், வணிக வரி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றன. தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.