ஒரே நாளில் தேசிய, மாநில விளையாட்டு போட்டிகள்! வீரர், வீராங்கனைகள் தவிப்பு

கோவை : பள்ளிக்கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறைக்கு போதிய புரிதல், ஒருங்கிணைப்பு இன்மையால், ஒரே நாளில், தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், திறமை மிகுந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 'முதல்வர் கோப்பைக்கான' மண்டல அளவிலான போட்டிகள் கோவையில், நாளை துவங்குகின்றன. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், 60வது தேசிய அளவிலான போட்டிகள் ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு தினங்களாக நடந்து வருகிறது; ௨௩ம் தேதி நிறைவடைகிறது.தேசிய அளவிலான போட்டிகளில், கோவை மாவட்டத்தை சேர்ந்த, ஆறு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இம்மாணவர்கள், முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதே நிலையில், அனைத்து மாவட்ட வீரர், வீராங்கனைகளும் உள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உரிய முறையில் திட்டமிட்டு, போட்டிகளுக்கான தேதியை முடிவு செய்வது அவசியம். தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அரசுத்துறையில் வேலைவாய்ப்பை பெற இயலும் என்பதால், இப்போட்டியை புறக்கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும், முதல்வர் கோப்பையில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாநில அரசின் அங்கீகாரம் கிடைப்பதுடன், ஒரு லட்சம், ௫௦ ஆயிரம் ரூபாய் என ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. இது மாணவர்களின் கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால், இப்போட்டியும், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு போட்டிகளில், எதில் பங்கேற்பது என்ற குழப்பத்தில், வீரர், வீராங்கனைகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

கோவை மண்டல மேலாளர் ராஜமகேந்திரன் கூறுகையில், ''விளையாட்டு துறையில் இதுபோன்று நடப்பது இயல்பு. தேசிய அளவிலான போட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடத்தப்படுகிறது. முதல்வர் கோப்பைக்கான போட்டி, அரசு அறிவுறுத்தலின் படி, நடத்தப்படுவதால் தேதியை மாற்றுவது இயலாது,'' என்றார்.