அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி: கூடுதல் கல்வித்தகுதிக்கு மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு

அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு கூடுதல் கல்வித்தகுதிக்காக மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


உதவி பேராசிரியர் பணி

மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் வாசுமதி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்று பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் ஸ்லெட், நெட் போன்ற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்று டாக்டர் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.

கணினி அறிவியலில் எம்.எஸ்சி., எம்.பில் படித்து ‘ஸ்லெட்’, ‘நெட்’ தேர்வில் வெற்றி பெற்றுள்ள நான், கடந்த 2002-ம் ஆண்டில் இருந்து மதுரை பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். கற்பித்தல் அனுபவம், உயர் கல்வி, நேர்முகத்தேர்வு ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நியாயமற்றது

நான், இந்த பணிக்கு விண்ணப்பித்து இருந்தேன். கடந்த 25.11.2014 அன்று நடந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். 2.12.2014 அன்று தேர்வானவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், முதுகலைபடிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு அவர்கள் பெற்றுள்ள டாக்டர் பட்டத்துக்காக 9 மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

முதுகலைப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தான் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று ஒரு தகுதியை நிர்ணயித்து இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு டாக்டர் பட்டத்துக்காக தனியாக மதிப்பெண் வழங்குவது நியாயமற்றது.

பாதிக்கப்பட்டுள்ளனர்

முதுகலைப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்று கூடுதல் கல்வித்தகுதியாக எம்.பில். படித்தவர்களுக்கு 6 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியான டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு 9 மதிப்பெண் வழங்குவதால் உண்மையிலேயே கூடுதல் கல்வித்தகுதியை பெற்றுள்ள எம்.பில். படித்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, முதுகலைப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்று டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு அவர்களது டாக்டர் பட்டத்துக்காக 9 மதிப்பெண் வழங்கும் விதியை ரத்து செய்ய வேண்டும். முதுகலை படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று டாக்டர் பட்டம் பெற்றவர்கள் ‘ஸ்லெட்’, ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தால் மட்டுமே அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பதில் அளிக்க உத்தரவு

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.பி.ரமேஷ் ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர், செயலர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், மனுதாரருக்காக உதவி பேராசிரியர்(கணினி அறிவியல் துறை) பணியிடம் ஒன்றை காலியாக வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.