ஆங்கில மொழி உச்சரிப்பு குறுந்தகடுகள்: அரசுப் பள்ளிகளில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

ஆங்கில மொழி உச்சரிப்பு தொடர்பான குறுந்தகடுகளை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தை எளிதில் கற்றுக்கொள்வதற்கானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தைச் சிறந்த முறையில் உச்சரிப்பதற்காகவும், கற்றுக்கொள்வதற்காகவும் 43 பாடங்களைக் கொண்ட 2 குறுந்தகடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்தக் குறுந்தகடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்காக வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் இந்த குறுந்தகட்டினைப் பதிவேற்றம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வள மேற்பார்வையாளருடன் இணைந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள டிவி, கம்ப்யூட்டர், எல்சிடி புரஜெக்டர் ஆகிய கருவிகள் மூலம் இந்தக் குறுந்தகடுகளை அனைத்துப் பள்ளிகளிலும் பயன்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
இந்த குறுந்தகடுகளைப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தைச் சிறந்த முறையில் கற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.