பெரியார் பல்கலைக்கழக ஒலிம்பியார்டு நுழைவுத்தேர்வு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பெரியார் பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் 15–ந் தேதி சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியார்டு நுழைவுத்தேர்வு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அங்கமுத்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–
சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியார்டு ஆனது 9,10,11, மற்றும் 12–ம்
வகுப்பு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இந்திய புவி அறிவியல் கூட்டமைப்பு சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான இத்தேர்வானது அடுத்த மாதம் 15–ந் தேதி காலை 10 மணிக்கு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இது கோடை காலத்தில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு 20 மாணவ–மாணவிகளை தேர்ந்தெடுக்கும் பொருட்டு நடத்தப்படுகிறது.
தேர்வில் தேர்ச்சி பெற்ற 20 மாணவ–மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பின்னர், இவர்களில் நான்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.500 வீதம் ஒலிம்பியார்டு விருது வழங்கப்படும். இறுதியில் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களில் சிறந்த நான்கு மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை இந்தியாவின் சார்பில் 2015 மே மாதத்தில் பிரேசிலில் நடைபெறும் 9–வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியார்டில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவர்.
இதனை புவியமைப்பியல் அமைச்சகம் மற்றும் இந்திய அரசு இணைந்து நடத்துகிறது. இந்த பயிற்சியானது மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புவியறிவியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு, தேசிய புவி அறிவியல் ஒலிம்பியார்டு பயிற்சி முகாம், புறப்படும் முன்நிலை பயிற்சி, சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியார்டு என நான்கு நிலைகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்விற்கான விண்ணப்பத்தை www.geosocindia.com/ieso2015/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ.50–க்குDD/Monyorder ஐ பேராசிரியர் முனைவர் வெங்கடாசலபதி, புவியமைப்பியல் துறை IESOIncharge, பெரியார் பல்கலைக்கழகம், சேலம்–11 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 10.2.2015 ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.