மரம் வளர்க்கும் போட்டி: இளைஞர்களின் புதிய முயற்சி

பொங்கல் விளையாட்டில் புதுமையாக குழந்தைகளிடையே மரம் வளர்க்கும் போட்டியை குமாரமங்கலம் கிராம இளைஞர்கள் நடத்தினர்.

திருச்செங்கோடு குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இளைஞர் மன்றத்தின் சார்பில், பொங்கல் விழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மன்றத்தின் 25ஆவது ஆண்டு விழாவையொட்டி, சமூக அக்கறையுடன் புதுமையானப் போட்டியை நடத்த இளைஞர்கள் முடிவு செய்தனர்.
இதன்படி, அந்தக் கிராமத்தில் உள்ள குழந்தைகள் இடையே மரம் வளர்க்கும் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
அடுத்த ஆண்டு இந்த மரக்கன்றுகளை முறையாகப் பராமரித்து, பாதுகாத்து மரங்களாக வளர்ப்பவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மரங்களை பெற்றுக் கொண்ட குழந்தைகள் கூறியது: எங்களது பகுதியில் மழை இல்லை. அதற்குக் காரணம் மரங்கள் இல்லை. அந்த மரங்களை வளர்க்க எங்களை ஊக்கப்படுத்த பரிசினை அறிவித்துள்ளனர்.
பரிசுக்காக இல்லாவிட்டாலும் எங்கள் பகுதியில் மழை பெய்ய வேண்டும் என்பதற்காக மரங்களை வளர்ப்போம் என்றனர்.
வெறும் விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்லாமல், இதுபோன்ற சமூக அக்கறையுள்ள போட்டிகளை அனைவரும் நடத்தினால் நாடு நலம் பெறும், மழை பெய்யும் என அந்தக் கிராம மக்கள் தெரிவித்தனர்.