அரசு ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவு கட்டாயம்: 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு உத்தரவு

பெங்களூரு: 'அரசுத் துறைகளில், 50 வயதிற்கு உட்பட்ட, 'சி' பிரிவு ஊழியர்கள் அனைவரும், கம்ப்யூட்டர் கல்வி கற்பது அவசியம்' என, கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு நிர்வாகத்திலுள்ள துறைகள், கம்ப்யூட்டர் மயமாகி வருகின்றன. இதனால், 'சி' குரூப்
ஊழியர்களில், 50 வயதுக்குட்பட்டவர்கள், கண்டிப்பாக கம்ப்யூட்டர் கல்வி கற்க வேண்டும் என, கடந்த 2ம் தேதி, அரசு உத்தரவிட்டு உள்ளது.

800 ஊழியர்கள்:

தற்போது, சட்டசபையில், 800 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில், 200 பேர், 'சி' குரூப் ஊழியர்கள். இவர்களில், 20 பேர் அடங்கிய குழுக்கள் வீதம், ஒவ்வொரு குழுவினருக்கும், 5ம் தேதியிலிருந்து, கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசுக்கு சொந்தமான, கர்நாடக மாநில எலக்ட்ரானிக் வளர்ச்சித் துறை (கியோனிக்ஸ்) மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி மற்றும் தேர்வுகள், வரும் மார்ச் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அனைத்து ஊழியர்களும், இப்பயிற்சியில் கண்டிப்பாக சேர வேண்டும் என, அரசு உத்தரவிட்டிருப்பதோடு, இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, சட்டசபை செயலகம் சான்றிதழ் வழங்கும். ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு, கம்ப்யூட்டர் அடிப்படை பயிற்சிகளான வார்த்தை சேர்க்கை, எம்.எஸ்.ஆபீஸ், பிரிண்டிங், இன்டர்நெட், கன்னடம் அச்சடிப்பு மென்பொருள் போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்படும்.

90 நிமிட தேர்வு:

பின், கர்நாடக பொது சேவை (கம்ப்யூட்டர் கல்வி தேர்வு) வைக்கும், 90 நிமிட தேர்வில், 80 மதிப்பெண் பெற்றால், அடுத்த பதவி உயர்வு, ஆண்டுதோறும் அளிக்கப்படும் சம்பள உயர்வு ஆகியவைகளை பெற, தகுதி உடையவர்களாகின்றனர்.

ரூ.5,000 ஊக்கத்தொகை!

கம்ப்யூட்டர் கல்வியை முடித்து, தேர்வில் தேர்ச்சி பெற்று, அதற்கான சான்றிதழை, சட்டசபை செயலகத்தில் சமர்ப்பித்தால். 5,000 ரூபாய் ஊக்கத்தொகை, ஒரே தவணையில் வழங்கப்படும்.

'குரூப்-டி'க்கும் பொருந்தும்:


'குரூப் - டி' ஊழியர்களும் (டிரைவர்கள், வனத்துறை பாதுகாவலர்கள், ஏட்டுகள், கலால் துறை பாதுகாவலர்கள், உதவியாளர்கள்), பதவி உயர்வு தேவையெனில், கம்ப்யூட்டர் கல்வியில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் தாக்கல் செய்வது அவசியம் என, சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது.