தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: 43 ஆயிரம் மையங்கள் அமைப்பு


தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

முதல் தவணையாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 18-ஆம் தேதியும், இரண்டாவது தவணையாக பிப்ரவரி 22-ஆம் தேதியும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
43 ஆயிரம் மையங்கள்: சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு கூடங்கள், தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 43,051 சொட்டு மருந்து மையங்கள் செயல்படவுள்ளன.
சென்னையில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்களின் குழந்தைகளுக்கும் முகாமில் சொட்டு மருந்து கொடுக்கலாம்.
பயணம் மேற்கொள்ளும் மக்களின் வசதிக்காக முக்கியப் பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய இடங்களில் 1,652 நகரும் மையங்கள் நிறுவப்படும்.
1000 நடமாடும் குழுக்கள்: தொலைதூரப் பகுதி, மலைவாழ் பகுதி, எளிதில் பயணம் மேற்கொள்ள முடியாத பகுதி மக்களுக்காக 1,000 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுபடும் குழந்தைகளை கண்டறிவதற்காக, சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் விரலில் மை வைக்கப்படும். இந்தப் பணிகளுக்காக சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 2 லட்சம் பேர் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
முகாம் நடைபெறும் ஓரிரு நாள்களுக்கு முன்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாள்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ரயில்-பேருந்து நிலையங்கள்: போலியோ சொட்டு மருந்து தினத்தையொட்டி, ரயில், பேருந்து நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய ரயில் நிலையங்கள், ரயில்வே குடியிருப்புகள், ரயில்வே மருத்துவமனை, சென்னையில் கோயம்பேடு உள்ளிட்ட பிரதான பேருந்து நிலையங்களில் காலை முதல் மாலை 6 மணி வரை சொட்டு மருந்து வழங்க முழு அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சில தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து ரயில் நிலையம் அருகே இருக்கும் இடங்களுக்கும் சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.