எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4–ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு


சென்னை,
எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4–ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது என்றும் அவ்வாறு மாணவர்களை சேர்த்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மெட்ரிகுலேசன் பள்ளிகள் தமிழ்நாட்டில் நர்சரி மெட்ரிகுலேசன் பள்ளிகள், மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் என்று ஏராளமான பள்ளிகள் உள்ளன. இவை அனைத்தும் சுயநிதி பள்ளிகள் ஆகும்.
இவற்றில் நர்சரி பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இயக்கத்தின் இயக்குனராக பிச்சை இருக்கிறார்.
மெட்ரிகுலேசன் பள்ளிகள் பல ஜனவரி மாதத்திலேயே அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கி விடுகிறது. குறிப்பாக எல்.கே.ஜி. மாணவர்சேர்க்கை இப்போதே தொடங்கி விடுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:–
ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது தமிழ்நாட்டில் உள்ள எந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் இப்போது மாணவர்சேர்க்கை நடைபெறக்கூடாது. ஏப்ரல் 4–ந்தேதிக்கு பின்னர் தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும்.
அதற்கான விண்ணப்ப படிவங்களும் அதன் பின்னர்தான் வழங்கவேண்டும். முன்கூட்டியே எந்த பள்ளியும் மாணவர் சேர்க்கைக்கான எந்த முகாந்திரமும் தொடங்கக்கூடாது. அவ்வாறு எந்த பள்ளியாவது மாணவர் சேர்க்கை நடத்தினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.