பன்றிக் காய்ச்சல் : 2 நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடி பரிசோதனை அவசியம்

இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் குறையால் இருந்தால் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குளிர்காலத்தில் வைரஸ் தொற்றுகளால் காய்ச்சல் பரவுவது வழ
க்கம். தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, வேலூர், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. பன்றிக் காய்ச்சல் நோயை பருவ காலங்களில் ஏற்படும் சாதாரணக் காய்ச்சல் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மனிதனில் இருந்து...: பன்றிக் காய்ச்சலைப் பொருத்தவரை இருமும்போதோ, தும்மும்போதோ ஒருவரிடம் இருந்து வைரஸ் கிருமி பரவும். எனவே கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். சாப்பிடுவதற்கு முன், கழிவறையைப் பயன்படுத்திய பின், வீட்டிலிருந்து அலுவலகம் சென்ற உடன், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய உடன் என குறைந்தது ஒரு நாளைக்கு பத்து முறையாவது கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2 நாளைக்கு மேல்...: ஒருவருக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக சரியான மருத்துவரையோ, மருத்துவமனையையோ அணுக வேண்டும். சுய மருத்துவம், அருகிலிருக்கும் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை வாங்குவது ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது. இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் குறையாமல் இருந்தால் உடனடியாக பன்றிக் காய்ச்சலுக்கான ரத்தப் பரிசோதைனையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது