பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
பிப்ரவரி மூன்றாவது வாரத்திற்குள் இந்தத் தேர்வுகள் முடிக்கப்பட்டுவிடும். அதே மாதம் 28-க்குள் மதிப்பெண் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். இந்தப் பாடங்களில் 200-க்கு 150 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், 50 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வும் நடத்தப்படும். தொழில் பிரிவு மாணவர்களுக்கு 2 பாடங்களில் 400 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.
வழக்கமாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட தேதியிலிருந்து செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தேர்வு தேதிகளை முடிவு செய்துகொள்ளுமாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மாவட்டந்தோறும் செய்முறைத் தேர்வுகளுக்கான பணிகள் இறுதிசெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்முறைத் தேர்வுகள் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தேர்வு மையங்கள், தேர்வு நடைபெறும் கால அட்டவணை ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில்... சென்னையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. 410 பள்ளிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்முறைத் தேர்வுகள் எழுத உள்ளனர்.
அதேபோல், மதுரையிலும் பிப்ரவரி 4 அல்லது 5-ஆம் தேதி பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடங்க உள்ளது.