சென்னை,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு தலைமை செயலகப் பணியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர்(மொழிபெயர்ப்பு) பதவிக்கான 16 காலிப்பணி இடங்களுக்கு கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6–ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இப்பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த 2013–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3–ந்தேதி நடைபெற்றது. மேற்படி, பதவிக்கான நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 46 விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் தேர்வு வரும் 28–ந்தேதி(புதன்கிழமை) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக்கடிதம் விரைவு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இத்தகவல் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.