விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் 2674 பேர் தற்செயல் விடுப்பு போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 2674 பேர் புதன்கிழமை தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்களில் பொதுமக்களுக்கான பணிகள் பாதிக்கப்பட்டன.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர் சங்கங்களை அவ்வப்போது அழைத்து பேசுவோம் எனவும், கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆனநிலையிலும் ஒருமுறை கூட அரசு ஊழியர் சங்க அமைப்புகளை அழைத்து பேசவில்லை. இதனால், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இதன் அடிப்படையில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், கருணை அடிப்படை பணிநியமன பிரச்னைகளுக்கு தீர்வு உருவாக்குதல், மருத்துவகாப்பீட்டு திட்ட குறைபாடுகளை களைதல், மத்திய அரசுக்கு இணையான படிகள் வழங்குதல், 50 சதவீத அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைத்தல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 3500 பேர் உள்ளனர். அதில், 1059 பெண் ஊழியர்கள் உள்பட 2674 பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கான பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.