25–ந் தேதி அன்று தமிழகம் முழுவதும் தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்கள் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 25–ந் தேதி அன்று தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்கள் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.

5–வது ஆண்டு இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ஜனநாயக தேர்தல் முறைகளில் குடிமக்கள் தங்கள் பங்களிப்பை அதிகப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்திய தேர்தல் ஆணையம் தனது நிறுவன நாளான ஜனவரி 25–ந் தேதியை தேசிய வாக்காளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் 2011–ம் ஆண்டில் இருந்து கொண்டாடி வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 25–ந் தேதியை ஐந்தாவது தேசிய வாக்காளர் தினமாக மாநிலமெங்கும் நாம் கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டின் மையநோக்கு ‘‘சுலபமான பதிவு; சுலபமான திருத்தம்’’ என்பதாகும்.
கவர்னர் சிறப்புரை தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்களுக்கு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் 64 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள அனைத்து 28 ஆயிரத்து 850 வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநில அளவிலான விழா, தமிழக கவர்னரின் தலைமையில் 25–ந் தேதி அன்று காலை 11 மணி அளவில் சென்னையில் கவர்னர் மாளிகையில் நடைபெறும். அந்த விழாவில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை ஏற்கவைத்து, கவர்னர் சிறப்புரையாற்றுவார்.
கலை நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் தேர்தல் பணி புரிந்த அலுவலர்களுக்கு விருது வழங்குவதுடன் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும் அவர் வழங்குவார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர், தமிழக தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் வாழ்த்துரை வழங்குவார்கள்.
வலுவான ஜனநாயகத்திற்கு பெருமளவில் பங்கேற்றலின் முக்கியத்துவத்தையும், அதில் இளைஞர்களின் பங்கையும், ‘‘சுலபமான பதிவு; சுலபமான திருத்தம்’’ என்ற மையக்கருத்தை உணர்த்தும் வகையில் இவ்விழாவில் பள்ளிச் சிறார் மற்றும் மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்ந்த கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாவட்டங்களில் விழாக்கள் இதே போல் மாவட்ட அளவிலான விழாக்களிலும், வாக்குச்சாவடி நிலையிலான விழாக்களிலும் தேசிய வாக்காளர் தினத்திற்கான உறுதிமொழியினை வாக்காளர்களை ஏற்க செய்வதோடு புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும் வழங்கப்படவுள்ளன. 23–ந் தேதி அன்று (நேற்று) அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டன. இதேபோல் 26–ந் தேதி அன்று நடைபெறவிருக்கும் கிராம சபைக்கூட்டங்களில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்படும்.
குடியரசு தின பேரணி சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா பேரணியில், ‘‘சுலபமான பதிவு; சுலபமான திருத்தம்’’ என்னும் மையநோக்கின் அடிப்படை குறித்த ஒரு அலங்கார ஊர்தியும் இடம் பெறும். தேசிய வாக்காளர் தினத்திற்கு முன்னோடி நிகழ்ச்சிகளாக மாவட்டங்களில் ஏற்கனவே பேரணிகள், மினி மராத்தான் ஓட்டங்கள், விவாதங்கள், மனித சங்கிலி நிகழ்ச்சிகள், வீதி நாடகங்கள், பலூன்கள் மூலம் விளம்பரங்கள் முதலியவை நடத்தப்பட்டு வருகின்றன.
சட்டத்திற்கு புறம்பான தூண்டுதல்களுக்கு ஆட்படாமல் கண்ணியத்துடன் மனசாட்சிப்படி வாக்களித்தல் மற்றும் வாக்காளர் பங்கேற்பை அதிகப்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இவ்விரு செய்திகளையும் பரப்புரை செய்திட அரசுத்துறைகளின் களப்பணியாளர்களையும் இதில் ஈடுபடுத்தியுள்ளோம்.
நேரடி ஒளிபரப்பு மாநில அளவிலான தேசிய வாக்காளர் தினவிழா நிகழ்ச்சியினை தலைமை தேர்தல் அதிகாரியின் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் காலை 10.55 முதல் நேரடி ஒளிபரப்பின் மூலம் காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.