20% கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை: ஆய்வு

தமிழகத்தில், கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 20 சதவீத பள்ளிகளில்,  மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதி இல்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

          கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009ன் கீழ், ஒவ்வொரு பள்ளிகளுக்கும் மாணவர் ஆசிரியர் விகிதம், வகுப்பறை ஆசிரியர் விகிதம், பள்ளி மைதானம், சுற்றுச்சுவர், பொது கழிவறை, பெண்களுக்கான கழிவறை, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர், நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கட்டாயம் இருப்பது அவசியம்.

பள்ளிகளில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்பின் கீழ் அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்க திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.

ஏசர் அமைப்பு சார்பில், கிராப்புற பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து, 2014ம் ஆண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 9.9 சதவீத பள்ளிகளில், குடிநீர் தொட்டி அமைக்கப்படவில்லை. 10.3 சதவீத பள்ளிகளில் குடிநீர் தொட்டி வசதிகள் இருந்தும் குடிநீர் வசதி இல்லை.

மேலும், 2.5 சதவீத பள்ளிகளில் பொதுக்கழிவறை வசதிகள் இல்லாமலும், 17.7 சதவீத பள்ளிகளில் கழிவறை இருந்தும் பயன்படுத்த இயலாத சூழலிலும் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி, 20 சதவீத பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெண்களுக்கான தனிப்பட்ட கழிவறை இல்லை; கழிவறை இருந்தும் பூட்டிகிடப்பது மற்றும் இருந்தும் பயன்படுத்த இயலாத சூழலில் இருப்பது என்ற பிரிவுகளின் கீழ் 31.3 சதவீத பள்ளிகள் உள்ளன. கிராமப்புற பகுதிகளில், மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமையே இடைநிற்றலுக்கு முக்கிய காரணம்.

மேலும், 34 சதவீத கிராமப்புற பள்ளிகளில் மைதான வசதியும், 29 சதவீத பள்ளிகளில் சுற்றுச்சுவர், 13.5 சதவீத பள்ளிகளில் நூலகம் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.