சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.100 கோடியில் நானோ அறிவியல் தொழில்நுட்ப மையம் துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பேட்டி

சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.100 கோடியில் நானோ அறிவியல் தொழில் நுட்ப மையம் தொடங்கப்படுகிறது என்று துணைவேந்தர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் துணைவேந்தர் ஆர்.தாண்டவன் நிருபர்களிடம் கூறியதாவது:–
ரூ.100 கோடியில் நானோ அறிவியல் தொழில் நுட்ப மையம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ரூ.100 கோடியை வழங்கி உள்ளது. அதில் நானோ அறிவியல் தொழில் நுட்ப மையம் அமைக்கப்படுகிறது. அதற்காக முதல் கட்டமாக ரூ.25 கோடியில் கிண்டியில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது நானோ அறிவியல் தொழில் நுட்ப மையத்திற்கு 10 ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். 10 பேர்களில் 2 பேர் பேராசிரியர்கள். 4 பேராசிரியர்கள் தேவை. ஆனால் தகுதியான பேராசிரியர்கள் இல்லாததால் 2 பேர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். 1 ரீடர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 7 விரிவுரையாளர்கள்(லெக்சரர்கள்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 10 பேர்களும் சேர்ந்து நானோ அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கு தேவையான கருவிகள், தளவாடப்பொருட்களை வாங்குவார்கள்.
இந்த மையம் வேதியியல் அறிவியல், உயிரி அறிவியல், இயற்பியல் அறிவியல் உள்ளிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார்கள்.
பதிவாளர் பணி நீட்டிப்பு சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஜவகர் பதவி முடிவடைந்துவிட்டது. எனவே மேலும் அவருக்கு 2 வருடம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்டவை.
சென்னை பல்கலைக்கழக தொலை தூரக் கல்வியை பொருத்தவரை மாணவர்கள் கல்வி கட்டணம் கட்டுவதும் ஆன்லைனில்தான், அவர்களுக்கு ஹால்டிக்கெட்டுகள் வழங்குவதும் ஆன்லைனில்தான். இப்படி பல காரியங்கள் மாணவர்கள் நலன் கருதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
முழு செயல்பாடு நானோ அறிவியல் தொழில்நுட்ப மையம் இப்போதே தொடங்கப்பட்டதாக இருந்தாலும் ஆசிரியர்கள் அந்த மையத்திற்கான கருவிகள் வாங்கிய பின்னர்தான் அதன் முழு செயல்பாடும் தொடங்கும்.
இவ்வாறு துணைவேந்தர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.