பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்திய அரையாண்டு தேர்வில், தமிழ்
பாடத்திலேயே 10 முதல் 20 மாணவர்கள் வரை, தேர்ச்சி பெறாதது, ஆசிரியர்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; நுாறு சதவீ
த இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரையாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத
மாணவர்களுக்கு, உடனடி தேர்வு துவக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை, பள்ளிகள்
வாரியாக 10 முதல் 20 மாணவ, மாணவியர் வரை எழுதினர். குறைந்த மாணவர்
எண்ணிக்கை உள்ள பள்ளிகளில், 10 பேர் வரை, அதிக மாணவர் எண்ணிக்கை உள்ள
பள்ளிகளில், 20 பேர் வரை தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஆசிரியர்களுக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்னும் இரண்டு மாதத்தில், பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில், தமிழில் 20
பேர் வரை தேர்ச்சி பெறாமல் இருப்பதால், பொதுத்தேர்வில் நுாறு சதவீத
தேர்ச்சி என்ற இலக்கு சாத்தியமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, 'மாணவர்கள் தேர்ச்சி
பெற வேண்டும் என்பதற்காக, முழுமையாக பாடுபட ஆசிரியர்கள் தயாராக
இருந்தாலும், சரியான ஒத்துழைப்பில்லை. சில மாணவர்கள், வகுப்புக்கே சரியாக
வருவதில்லை. மாணவர்களின் பெற்றோர்களிடம் அறிவுறுத்தினாலும் அவர்களும்
அக்கறை காட்டுவதில்லை. இத்தகைய மாணவர்களால், நுாறு சதவீத இலக்கு, சில
பள்ளிகளில் குறைய வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, ஆசிரியர்களுக்கு பெற்றோர்
ஒத்துழைத்து, மாணவர்களை பள்ளிக்கு வரச்செய்ய வேண்டும்,' என்றார்.