100 சதவீத தேர்ச்சிக்காக பிளஸ்–2 மாணவியை பள்ளியில் இருந்து நிறுத்தியதாக ஐகோர்ட்டில் வழக்கு

100 சதவீத தேர்ச்சிக்காக பிளஸ்–2 மாணவியை பள்ளியில் இருந்து நிறுத்தியதாக தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ்–2 மாணவி

நெல்லை மாவட்டம் சிவலார்குளத்தை சேர்ந்தவர் சங்கரகுமார். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–

என் மகள் பொன்சினேகா, நெல்லை வி.எம்.சத்திரம் அரியகுளத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கடந்த ஆண்டு கணினி அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ்–1 வகுப்பில் சேர்ந்தார். இந்த கல்வி ஆண்டில்(2014–2015) விடுதியில் தங்கி இருந்து பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 22.11.2014 அன்று பள்ளி முதல்வர் அழைத்ததன் பேரில் பள்ளிக்கு சென்றேன். அப்போது, எனது மகள் படிப்பில் சுமாராக இருப்பதாக தெரிவித்த பள்ளி முதல்வர், அவருக்கு விடுதியில் மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு எடுக்க இருப்பதாக தெரிவித்தார். இதற்கு சம்மதம் தெரிவித்து கடிதம் அளிக்க வேண்டும் என்று கூறி ஒரு வெற்றுத்தாளில் கையெழுத்து பெற்றார்.

பள்ளியில் இருந்து வெளியேற்றம்

இந்த நிலையில், 7.12.2014 அன்று செல்போனில் பேசிய விடுதி வார்டன் பள்ளி முதல்வரை சந்திக்கும்படி தெரிவித்தார். நான், பள்ளி முதல்வரை சந்தித்த போது, எனது மகள் உள்ளிட்ட 7 மாணவிகளை சில காரணங்களுக்காக பள்ளியில் இருந்து ஒரு மாதத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். 7.1.2015 அன்று எனது மகளை அழைத்துக்கொண்டு மீண்டும் பள்ளிக்கு சென்ற போது, எனது மகளை பள்ளி மூலம் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று முதல்வர் தெரிவித்தார்.

அதன்பின்பு தான், ஏற்கனவே என்னிடம் கையெழுத்து பெற்ற வெற்றுத்தாளில் அவர்களாகவே எழுதிக்கொண்டு எனது மகளை பள்ளியில் இருந்து வெளியேற்றியது தெரியவந்தது. மேலும், எனது மகள் பள்ளி மூலம் அல்லாமல் தனியாக தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் பணம் செலுத்தி இருப்பதும் தெரியவந்தது. எனது மகள் கணினி அறிவியல் படித்து வந்த போதும், வரலாற்று பாடத்தில் தேர்வு எழுத உள்ளதாக பணம் கட்டி இருப்பதும் தெரியவந்தது.

கணினி அறிவியல் பாடத்தில் தேர்வு எழுத பணம் செலுத்தினால் செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கருதி பள்ளி நிர்வாகம் அதுபோன்று செய்து இருப்பது தெரியவந்தது. 1½ ஆண்டுகளுக்கு மேலாக கணினி அறிவியல் பாடத்தை எடுத்து படித்த எனது மகளை திடீரென்று வரலாற்றுப் பாடத்தில் தேர்வு எழுத பணம் செலுத்தி இருப்பதன் மூலம் அவரது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரலாற்று பாடப்புத்தகம் எங்கும் கிடைக்கவில்லை. பள்ளியில் பிளஸ்–2 படிக்கும் அனைத்து மாணவிகளும் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், யாரேனும் தோல்வி அடைந்தால் பள்ளியின் நற்பெயர் குறைந்து விடும் என்றும் கருதி இதுபோன்ற நடவடிக்கையை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இது நியாயமற்றது.

எனவே, எனது மகளை கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து படிக்கவும், அதே பாடப்பிரிவில் தேர்வு எழுதவும் அனுமதிக்க பள்ளி நிர்வாகத்துக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நோட்டீசு

இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் காரல்ஜேக்கப், வெங்கடேஷ்வர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குநர், பள்ளி தாளாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை வருகிற 20–ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.