RTI : மேல் முறையீடு பதிவு எண் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிப்பு:

RTI : மேல் முறையீடு பதிவு எண் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிப்பு: தமிழ்நாடு தகவல் ஆணையம் ஏற்பாடு
தமிழ்நாடு அரசு தகவல் ஆணையம், மேல் முறையீடு மனுக்கள் ஏற்கப்பட்ட விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்துவது, சமூக ஆர்வலர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம், 2004 டிசம்பரில், லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே மாதம், சட்ட முன் வடிவு, பல திருத்தங்களுடன்
, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.இச்சட்டம், ஜம்முகாஷ்மீர் நீங்கலாக, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், அரசு அதிகாரிகளிடம் இருந்து, தகவல் பெறும் உரிமையை, அடிப்படை உரிமையாக, மக்களுக்கு வழங்கி உள்ளது.
இச்சட்டத்தின் மூலம், பதிவேடுகள், ஆவணங்கள், அஞ்சலக குறிப்புகள், மின் அஞ்சல்கள், ஆணைகள், தினசரி குறிப்புகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், முன் வடிவங்கள், மின்னணு வடிவில் பதிவாகி உள்ள தகவல்கள், கோப்பு குறிப்புகள் அனைத்தையும் மக்கள் கேட்டு வாங்க முடியும். தகவல் பெற விரும்புவோர், என்ன தகவல் வேண்டும் என்பதை எழுதி, 10 ரூபாய்க்கான கோர்ட் பீஸ் ஸ்டாம்ப் ஒட்டி, சம்பந்தப்பட்ட துறை, பொது தகவல் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அவர் தகவல் தராவிட்டால், உயர் அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யலாம். அவரும் குறித்த காலத்திற்குள், தகவல் தர மறுத்தால், தகவல் அறியும் ஆணையத்தில், முறையீடு செய்யலாம். ஆணையம் முறையீடை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை வரவழைத்து, விசாரணை நடத்தும்.தமிழகம் முழுவதும் இருந்து, ஏராளமான மேல் முறையீடு மனுக்கள், தகவல் அறியும் உரிமை ஆணையத்திற்கு வந்துள்ளன. அவற்றை ஆணையர்கள் விசாரித்து வருகின்றனர்.
மேல் முறையீட்டு மனுக்கள் ஏற்கப்பட்டதா என்ற விவரத்தை, மனுதாரர்கள் தபால் மூலம் அறிந்து வந்தனர்.தற்போது, அவர்கள் மொபைலுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.தங்களின் மனு, ஆணையத்தில் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது என, தமிழில் தகவல் அனுப்புவதுடன், பதிவு எண்ணையும் அனுப்புகின்றனர். சட்ட விதிகளுக்குட்பட்டு, மனுவிற்கு தீர்வு காணப்படும் என்ற தகவலும், அதில் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரத்தை சேர்ந்த, சமூக ஆர்வலர் கோ.ரா.ரவி கூறும்போது, ''மனு ஏற்கப்பட்ட விவரத்துடன், பதிவு எண்ணையும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், மனுக்கள் மீதான விசாரணையை விரைவுப்படுத்தவும், ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.