கவுன்சிலிங்கில் முறைகேடு:ஆசிரியர்கள் போராட்டம் - DINAMALAR

திண்டுக்கல்: திண்டுக்கல் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.



திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 10 தொடக்க பள்ளிகள் துவங்கப்பட்டன. 2 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், 5 தொடக்கப்பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. புதிதாக உருவான தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலைஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பதவிஉயர்வு கவுன்சிலிங் திண்டுக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்தர்ஷீலா தலைமை வகித்தார். இதில் 12 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செயலாளர் விவேகானந்தன், பொருளாளர் பெரியசாமி தலைமையில் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதை கண்டுகொள்ளாமல் அலுவலகத்தை விட்டு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் வெளியேறியதால் ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.

ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செயலாளர் விவேகானந்தன் கூறியதாவது: "பரளிபுதூரில் இடைநிலைஆசிரியராக கவிதா பணிபுரிந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட பட்டதாரிஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து முறையிட்டதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் சீனியாரிட்டி பட்டியலில் சேர்க்காமல் கவுன்சிலிங் நடத்தியுள்ளனர்,' என்றார். மாவட்ட கல்வி அலுவலர் எஸ்தர்ஷீலா கூறுகையில், ""சீனியாரிட்டி பட்டியலில் உள்ளபடி கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது. எந்த முறைகேடும் நடக்கவில்லை,'' என்றார்.