வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு: அரசு அதிகாரிகளுக்கு புது கிடுக்கிப்பிடி

புதுடில்லி: மத்திய அரசின், 26 லட்சம் அதிகாரிகள், தங்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு, வெளிநாட்டு வங்கிகளில் செய்துள்ள முதலீடு போன்ற தகவல்களை, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'லோக்பால் சட்டப்படி, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும்
அதிகாரிகளின் மனைவி, வாரிசுகளின் வெளிநாட்டு முதலீடு, வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதற்கான படிவங்கள், தனியாக வழங்கப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட, சொத்து, முதலீடு, சேமிப்பு விவரங்களை தெரிவிக்க, மத்திய அரசு அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வெளிநாட்டு கணக்கு, முதலீடு விவரங்களும் இப்போது கோரப்பட்டுள்ளன.'சொத்து விவரங்களை வெளியிடுவதால், அது குறித்த தகவல்கள் பிறருக்கு தெரிய வாய்ப்பு உள்ளது' என, அச்சம் தெரிவித்துள்ள அதிகாரிகள், அந்த தகவல்கள் எந்த அளவுக்கு ரகசியமாக வைக்கப்படும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.