பள்ளியில் மூலிகை விவசாயம் செய்து கற்றுக்கொடுக்கும் மழலைகள்: மருந்தற்ற வாழ்விற்கு அச்சாரம் விதைப்பு


பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே அரசுப்பள்ளியில், மாணவர்கள் ஆசிரியர்கள் உதவியுடன் மூலிகைச்செடிகளை நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும், பெற்றோரிடம் அதன் பயன்பாடு குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.


உண்ணும் உணவே மருந்து என வாழ்ந்த மூதாதையர்கள், மருந்து, மாத்திரைக்கு பதிலாக, மூலிகை செடிகளையே பயன்படுத்தி, நோயை குணமாக்கி வந்தனர். நாகரிக மாற்றம் ஏற்படாத அந்த காலத்தில், மூலிகையின் பயன்பாட்டினை அறிந்த
மூன்னோர்கள், அதனை வளர்த்து வந்ததுடன், எந்த நோய்க்கு எந்த மூலிகை சாப்பிட்டால் நல்லது என தெரிந்து, அதனை சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். கீரை உள்ளிட்ட சத்து வகையான காய்கறிகளையும் உணவில் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. பின், காலப்போக்கில், சத்தான உணவுகளை உண்ணாமல், நாகரிக மாற்றம் என்ற பெயரில், கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்கு தீங்கு தரக்கூடிய உணவு வகைகளை சாப்பிட துவங்கினர். விளைவு, பெயர் தெரியாத நோய்கள் தினமும் முளைத்து வருகின்றன. சத்தான காய்கறிகள் மட்டுமின்றி, மூலிகைச்செடிகளின் பயன்பாட்டினையும் அறியாத இளைய தலைமுறையினர், சிறு உடல் நலம் சரியில்லா விட்டாலும், ஆங்கில வழி மருத்துவத்தை நாடி, மாத்திரை, மருந்துகளை உட்கொள்வது வழக்கமாகி வருகிறது.

மேலும், டாக்டர்கள், மாத்திரை, மருந்து கொடுத்தாலும், சத்தான உணவுகளை சாப்பிடவும்; கீரை சேர்த்துக் கொள்ளுங்கள்,' போன்ற அறிவுரைகளை கூற தயங்குவதில்லை. மெல்ல... மெல்ல... மறைந்து வரும் மூலிகைப்பயன்பாடு குறித்து மாணவர்களிடையே விளக்கும் வகையில், பொள்ளாச்சி அருகே ஒரு பள்ளி மாணவர்கள் மூலிகை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி அருகேயுள்ளது ஆர்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில், 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போதே, மூலிகைச்செடிகள் அழகாய் நின்று நம்மை வரவேற்கிறது.

இப்பள்ளி மாணவர்களிடையே படிப்பு மட்டுமின்றி, மூதாதையரின் வாழ்க்கை முறை, மூலிகை பயன்பாடு குறித்து அவ்வப்போது ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். இதில், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உதவியோடு, மூலிகைச்செடிகளை நட்டு வருகின்றனர். அதில், பொது ஆரோக்கியத்திற்கு உகந்த திருநீர் பத்தினி, நோய் எதிர்ப்பு சக்தி தரும் துளசி, நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரை, கண்ணிற்கு உகந்த நந்தியா வட்டம், சளி, கபம் சரி செய்யும் கற்பூர வல்லி உள்ளிட்டவைகளை நட்டு வளர்த்து வருகின்றனர். மாணவர்களே தினமும் அந்த செடிக்கு தண்ணீர் விட்டு வளர்த்து வருகின்றனர். மேலும், பள்ளியில், மாணவர்களை கொண்டு சுகாதார குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூலம் பெற்றோரிடம் மூலிகை பயன்பாடு குறித்து விளக்கப்படுகிறது. மூலிகையின் மகத்துவம் குறித்து இளைய தலைமுறையிடம் விளக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


சிறு முயற்சி தான்...:


பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களிடம் கல்வி கற்பிப்பதோடு, உடல்நலம் பேணுவது குறித்தும் விளக்கப்படுகிறது. அதில், பாட்டி வைத்தியம், கை வைத்தியம் என பெயர் பெற்ற மூலிகை வைத்தியம் குறித்து மாணவர்களிடையே தினசரி விளக்கப்பட்டு வருகிறது. அதில், ஒரு கட்டமாக மாணவர்களே மூலிகை செடிகளை நட்டு வளர்த்து வருகின்றனர். மேலும், பள்ளியில், அமைக்கப்பட்ட சுகாதார குழுவினர் வாரத்தில், மதிய உணவு வேளையின் போது, ஒரு நாள் ஒரு மாணவரது வீட்டிற்கு சென்று, பெற்றோரிடம் மூலிகை பயன்பாடு குறித்து விளக்குவதுடன், புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் ஆரோக்கிய வாழ்விற்காக இந்த சின்ன அளவிலான முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர். பள்ளி வளாகத்தில் இந்த சின்ன அளவிலான மூலிகை பண்னை அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. இந்த திட்டம் மூலம் மூலிகை பயன்பாடு மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.