சென்னை உயர் நீதிமன்றம்: விடுமுறைகால நீதிமன்றம் அறிவிப்பு


சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 4-ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ் விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விடுமுறை நாள்களில் அவசர மனுக்களை விசாரணை செய்வதற்காக விடுமுறைக் கால நீதிமன்றம் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பொன்.கலையரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையும், ஜனவரி 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரையும் உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாள்களில் அவசர மனுக்களை விசாரணை செய்வதற்காக விடுமுறை கால நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அவசர மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் விசாரணை செய்வர்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்படும் அவசர மனுக்களை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரணை செய்வர்.
விடுமுறை நாள்கள் அனைத்தும் நீதிமன்ற பதிவுத் துறை செயல்படும். தாக்கல் செய்யப்படும் அனைத்து அவசர மனுக்களும் டிசம்பர் 30-ஆம் தேதி விசாரணை செய்யப்படும். இந்த நாளில் மட்டும் மனு தாக்கல் நடைபெறாது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.