பல்கலை தேர்வு முறை மாற்றம்: ரத்து செய்யக்கோரி வழக்கு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் புதிய முறையில் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வெளியான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில் துணைவேந்தருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை காமராஜ் பல்கலை கல்வி கவுன்சில் உறுப்பினர் விவேகானந்தன் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜ் பல்கலை தேர்வு விடைத்தாள்களை (ஓ.எம்.ஆர்.,) அச்சடித்து வினியோகித்தல் மற்றும் தேர்வுக்கு முன், பின் ஆன்லைன் முறையில் தானாக மதிப்பீடு செய்யும் முறைக்கு டிச.,17 ல் பதிவாளர் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு சிண்டிகேட், செனட், கல்வி கவுன்சில் ஒப்புதல் பெற வேண்டும். டெண்டரில் குறிப்பிட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற 50 கோடி ரூபாய் செலவாகும். தேர்வு நடைமுறையில் இம்மாற்றங்களை நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்த உள்ளனர். மாணவர்கள் சேர்க்கையின்போதே செய்திருக்க வேண்டும். டெண்டர் அறிவிப்பில் உள்நோக்கம் உள்ளது. விதிமுறைகளை பின்பற்றவில்லை. புதிய நடைமுறையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய தடை விதிக்க வேண்டும். டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்தார். மனுதாரர் வக்கீல் லஜபதிராய் விசாரித்தார். பல்கலை துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.