கல்வித்துறையில் கோர்ட் அவமதிப்பு வழக்குகள்:விரைந்து முடிக்க அரசு செயலர் உத்தரவு

'கல்வித் துறையிலுள்ள கோர்ட் அவமதிப்பு வழக்குகளையும், நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்,'' என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா
உத்தரவிட்டார்.கல்வித் துறையில் உள்ள கோர்ட் வழக்குகளின் தன்மை உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் ஆலோசனை நடத்தினார். இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர்கள் கருப்பசாமி, கார்மேகம், பழனிச்சாமி பங்கேற்றனர்.
சபீதா பேசியது குறித்து கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கல்வித் துறையில் ஆசிரியர்கள், ஊழியர்களின் பணப்பலன், பணி மூப்பு உட்பட பல காரணங்களுக்காக நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மதுரை உட்பட 10 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட அவமதிப்பு வழக்குகள் உள்ளன. இவற்றை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் எடுக்க வேண்டும். முடிந்தளவு மனுதாரர்களை அழைத்து பேச வேண்டும்.
கோர்ட் உத்தரவுப்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துவதை ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். கழிப்பறைகள் இல்லாத அரசு பள்ளிகள் என்ற சூழ்நிலை ஏற்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டதாக தெரிவித்தனர்.இன்று (டிச.,12) சென்னையில் அனைத்து மாவட்ட ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர்களின் கூட்டம் நடக்கிறது.