பொங்கல் முன்பணம்:ஆசிரியர்கள் கோரிக்கை

திருப்பூர் :அதிக தொகை ஒதுக்கி, அனைவருக்கும் பொங்கல் முன்பணம் வழங்க வேண்டும், என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் வடக்கு வட்டார தலைவர் பாலசுப்ரமணியம், பொருளாளர் மணிகண்டபிரபு அறிக்கை:
திருப்பூர் வடக்கு பகுதியில், 92 பள்ளிகளில் 587 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; ஒரு பிரிவு ஆசிரியர்கள் கல்வித்துறை கட்டுப்பாட்டிலும், ஒரு தரப்பு ஆசிரியர்கள் எஸ்.எஸ்.ஏ., திட்டத்திலும் உள்ளனர். பண்டிகை காலங்களில், ஆசிரியர்களுக்கு முன்பணம் வழங்கி, மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும்.
கடந்தாண்டு தீபாவளிக்கு, எஸ்.எஸ்.ஏ., சார்பில் பணியாற்றும் 271 ஆசிரியர்களில் 50 பேருக்கு மட்டுமே முன்பணம் ஒதுக்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால், அனைவருக்கும் வழங்கும் வகையில் எஸ்.எஸ்.ஏ., பிரிவுக்கு அதிக தொகை ஒதுக்க வேண்டும். கடந்த முறை விண்ணப்பித்து, முன்பணம் பெறாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.