எஸ்எஸ்எல்சி மாணவர்களின் பெயர் பட்டியல் பிரவுசிங் சென்டரில் தயாரிக்க பள்ளிகளுக்கு தடை

   எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மாணவர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தனியார் பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள பள்ளிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.

           இதற்காக தகுதியுள்ள மாணவ-மாணவியர் கொண்ட பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு மாணவர்கள் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்குநரகத்தின் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு ஏற்றவாறு முன்கூட்டியே ஆப்லைனின் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். ஜனவரி 2ம் தேதி முதல் இப்பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்கத்தின் www.dge,tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து உரிய யூசர்நேம், பாஸ்வேர்டு பெற்று ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இப்பணிகளை ஜனவரி 6ம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். இப்பணியை எந்த பள்ளியும் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் மேற்கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது.
           திருத்தங்கள் இருப்பின் அதனை ஆன்லைனில் பதிவேற்றம்செய்யும் முன்னரே செய்து முடிக்க வேண்டும்.ஆன்லைனில் பதிவேற்றம் செய்த பின்னர் மாணவர்களின் பெயர் விபரங்களில் திருத்தங்கள் செய்வது மிகவும் சிரமமான நிலையை ஏற்படுத்தும். பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் பெயர் பட்டியலில் ஏற்படும் திருத்தங்களுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரே பொறுப்பேற்க நேரிடும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.