உள்ளதும் போச்சு ! : நடுநிலை பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிதி : பராமரிப்பு பணியிலும் தாமதம் ஏற்படும்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில், நான்கு நடுநிலைப் பள்ளிகளுக்கு, சமையல் அறை கட்டடம் கட்டுவதற்கு, ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாததால், நடப்பாண்டு வேறு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு அந்த நிதி மாற்றப்பட்டுள்ளது. இதனால், சமையல் அறை
கட்டமைப்பு வசதி இல்லாமல், இட நெருக்கடியிலும், சுகாதாரமற்ற இடத்திலும் சமையல் செய்ய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.வாலாஜாபாத் ஒன்றியத்தில், 109 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு, தேவையான கட்டட வசதி மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து, தலைமை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு, கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்வது வழக்கம்.
கட்டடங்கள் பழுது
இந்த பள்ளிகளின் தேவை குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, நிதி
ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவு எடுப்பர்.அதேபோன்று, ஊவேரி நிதி நாடும் நடுநிலைப் பள்ளி, கொட்டவாக்கம் ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பூசிவாக்கம் ஒன்றிய நடுநிலைப் பள்ளி, களியனுார் நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளி களில், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, சமையல் அறை கட்டடங்கள், போதிய பராமரிப்பின்றி காணப்பட்டன.இதையடுத்து, இந்த கட்டடங்களை பராமரிக்க கல்வி அதிகாரிகளால், நிதி கோரப்பட்டது. அதன்பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தனர்.
நிதி மாற்றம்
ஆனால், இந்த நான்கு பள்ளிகளிலும், சமையல் அறைக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக, கடந்த 2012-13ம் நிதி ஆண்டு, எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தின் கீழ், 10.95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஊவேரி நிதி நாடும் நடுநிலைப் பள்ளிக்கு, 3 லட்சம் ரூபாய்; கொட்டவாக்கம் ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 2.65 லட்சம் ரூபாய்; பூசிவாக்கம் ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, 2.65 லட்சம் ரூபாய்; களியனுார் நடுநிலைப் பள்ளிக்கு, 2.65 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியை பயன்படுத்தி, கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. நிதி
அப்படியே இருந்தது.
இதற்கிடையில், இந்த பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, நடப்பாண்டு புளியம்பாக்கம், வேளியூர், பழையசீவரம், 144 தண்டலம் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கு, இருப்பு அறையுடன் கூடிய, சமையல் அறை கட்டடம் கட்டுவதற்கு, நிதிமாற்றம் செய்து, வட்டார வளர்ச்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
சுகாதாரம் கேள்விக்குறி
கல்வி அதிகாரிகளின் பரிந்துரை குறித்து, உரிய முறையில் ஆய்வு செய்திருந்தாலே, இத்தனை கால விரயமும், தேவையற்ற தாமதமும் ஏற்பட்டிருக்காது. பராமரிப்புக்கு நிதி கேட்டால், புதிய கட்டடத்திற்கு நிதி ஒதுக்கிவிட்டு, பின் அதை திரும்ப பெற்றதால், பராமரிப்பு இல்லாத கட்டடத்திற்கு அடுத்த ஆண்டுதான் நிதி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பள்ளிகளில், பெரும்பாலான சமையலறை கட்டடங்கள், பல்வேறு குறைபாடுகளுடன் உள்ளன. இவை அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டிக் கிடக்கின்றன. சிலவற்றில் மேற்கூரையில் தண்ணீர் கசிவும், சிமென்ட் காரை பெயர்ந்தும், இட நெருக்கடியில் சமையல் செய்ய வேண்டிய கட்டாயத்திலும் உள்ளன.
அது வரையில், சுகாதாரமற்ற பகுதியில், சமையல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதோடு, சுகாதாரமான உணவு மாணவர்களுக்கு கிடைப்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
தெரியவே தெரியாது
இதுகுறித்து, ஊவேரி, கொட்டவாக்கம், பூசிவாக்கம், களியனுார் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்டபோது, 'நிதி ஒதுக்கீடு குறித்த விவரமும், நிதி மாற்றம் செய்யப்பட்ட விவரம் குறித்தும் தெரியாது'என்றனர்.
இதுகுறித்து, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது:
கடந்த 2012-13ம் ஆண்டில் சமையல் அறை கட்டடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில், ஏற்கனவே, கடந்த 2008-09ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடங்கள் உள்ளன. அவை பழுதடைந்து
உள்ளன. சிறு சிறு பராமரிப்பு பணிகள் செய்தால் போதும் என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த மாதம் ஒன்றிய பொறியாளர்கள் பள்ளி தோறும் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் படிதான், நிதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த நோக்கமும் இல்லை. தேவை இருப்பின், அந்த பள்ளிகளின் சமையல் அறை கட்டடங்கள் சீரமைத்து கொடுக்கப்படும்.வட்டார வளர்ச்சி
அலுவலர்