இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்த வலியுறுத்தல்

உலகளவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகமாக கொண்டுள்ள நாடாக இந்தியா விளங்கி வரும் வேளையில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.  
 
     அதிக மதிப்பெண் பெற்று அனைத்து தரப்பினருக்கும் கல்வி கிடைக்க செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கல்வியையும் முறையான பயிற்சியையும் அளித்து அவர்களின் திறன்களை கவனிக்க வேண்டும். நாட்டில் மொத்தம் 10.7 கோடி பேர் உயர்நிலைப் பள்ளி கல்வி பயின்று வருகின்றனர். இதன் மூலம் கல்வியை வழங்குவதில் உலகில் மிகப் பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. ஆனால் மாணவர்களின் விகிதாசார அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி கல்வியில் மாணவர் சேர்க்கையானது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா 53 சதவீதமே பெற்றுள்ளது.இது அமெரிக்காவில் 93 சதவீதமும், தென் ஆப்பிரிக்காவில் 94 சதவீதமும், ரஷ்யா, மெக்ஸிகோ நாடுகளில் 89 சதவீத மாணவர்களும், உயர்நிலை பள்ளி கல்வி பெறுகின்றனர். நாட்டில் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் உயர் கல்வி பயிலுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். உலகில் சிறந்த 200 பல்கலைக் கழகங்களில் இந்தியாவின் ஒரு பல்கலைக் கழகமும் இடம் பெறவில்லை என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.ஆனால் கி.மு. 6ம் நூற்றாண்டு முதல் கி.பி. 12ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நாளந்தா, தட்சசீலம், விக்ரமசீலம் போன்ற கல்வி நிறுவனங்களில் பயில வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் குவிந்தனர் என்று அவர் தெரிவித்தார்.