ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தேர்வு செய்வதில் குழப்பம்யு.பி.எஸ்.சி.,க்கு அனுப்பிய பட்டியலை நிறுத்திய அரசு

மாநில அரசு அதிகாரிகளுக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து அளிக்க, மத்திய பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி.,க்கு அனுப்பிய தேர்வாளர் பட்டியலை, தமிழக அரசு நிறுத்தி உள்ளது.


வாய்ப்பு :நடப்பாண்டில் தமிழகத்துக்கு, வருவாய்த்துறை அல்லாத பிற துறையில் இருந்து, ஒரு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பதவியை நிரப்ப, வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக, கல்வித் துறையைச் சேர்ந்த இளங்கோ, அறிவொளி; ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த பொன்னையா, லட்சுமிபதி; கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த சிவன் அருள் என, ஐந்து பேர் கொண்ட பட்டியலை, யு.பி.எஸ்.சி.,க்கு தமிழக அரசு அனுப்பியது.

குற்றப்பத்திரிகை :கூட்டுறவுத் துறை அமைச்சரின், தனி செயலர் அன்பு செல்வனை, இப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே பட்டியலில் இடம் பெற்றுள்ள, கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த அதிகாரி சிவன் அருள் மீது, பணியாளர்கள் விதி - 17 பி மூலம், துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு உள்ளது என, புகார் எழுந்துள்ளது.

துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஒருவரை, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பதவிக்கு அனுப்ப முடியாது. எனவே, ஏற்கனவே அனுப்பிய தேர்வாளர் பட்டியலை நிறுத்தி வைக்க வேண்டும் என, யு.பி.எஸ்.சி.,யை, தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், புதிய பட்டியல் விரைவில் அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளது.சிவன் அருள் தவிர, இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள, கல்வித் துறை அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. அரசின் இந்த அணுகுமுறையால், தமிழகத்துக்கான, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து அதிகாரியைத் தேர்வு செய்யும் பணியில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சி.பி.ஐ., விசாரணை தேவை:மாநில அரசின், மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:போலீசாரின் ரகசிய அறிக்கை, பணி திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு தான், ஒரு பதவிக்கு, ஐந்து பேர் கொண்ட தேர்வாளர் பட்டியலை தயார் செய்து, யு.பி.எஸ்.சி.,க்கு அரசு அனுப்புகிறது.அதன்பின், பட்டியலில் உள்ள ஒரு அதிகாரி மீது, வேண்டும் என்றே, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, பழிவாங்கும் நடவடிக்கை. அரசியல் ரீதியான இந்த அணுகுமுறையால், அதிகாரிகளிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.துறையின் மூத்த அதிகாரிகள் தான், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள். ஆனால், அரசியல்வாதிகளின் தலையீட்டால், இளம் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு சாதகமாக நடந்து கொள்பவர்களும், தேர்வு செய்யப்படுகின்றனர்.

கடந்த காலங்களிலும் இதுபோன்று நடந்துள்ளது. எனவே, கடந்த காலங்களில் நடந்த தேர்வு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டால், பல உண்மைகள் வெளிவரும். ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து அளிக்க, யு.பி.எஸ்சி., தனித் தேர்வை நடத்தும் முறையை, முந்தைய மத்திய அரசு அறிவித்தது. இந்தத் தேர்வு முறை மூலம், அரசியல் தலையீடு மற்றும் பாரபட்சமான செயல்களைத் தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தேர்வு எப்படி நடக்கிறது

*நேரடி ஐ.ஏ.எஸ்., தேர்வை யு.பி.எஸ்.சி., நடத்துகிறது.
*இதுதவிர, விகிதாச்சார அடிப்படையில், மாநில அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அந்தஸ்து அளிக்கப்படுகிறது.

*குரூப் - 1 தேர்வு எழுதி, மாநில வருவாய்த்துறையில் பணிக்கு வருபவர்களுக்கு, தன்னிச்சையான பதவி உயர்வு மூலம், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து கிடைக்கிறது.

*இதுதவிர, பிற துறையில் உள்ள அதிகாரிகளுக்கும், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து அளிக்கப்படுகிறது. இதற்கு, ஐந்து பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்படும். மூத்த துறை அதிகாரிகள், அவர்களின் பணித் திறன், கல்வித் தகுதி, அவர்கள் குறித்த போலீசாரின் ரகசிய அறிக்கை அடிப்படையில், தேர்வாளர் பட்டியலை, மாநில அரசு தயார் செய்து, யு.பி.எஸ்.சி.,க்கு அனுப்பும்.

*இதன்பின், யு.பி.எஸ்.சி., உறுப்பினர் ஒருவர் தலைமையில், நேர்காணல் குழு அமைக்கப்படும். இதில், மாநில தலைமை செயலர், உள்துறை செயலர், மாநில மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி மற்றும் இணை செயலர் அந்தஸ்தில் உள்ள, இரு மத்திய அரசு அதிகாரிகள் இடம் பெறுவர். இக்குழு, தேர்வாளர் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்யும்.