மாணவர்களுக்கு ஆதார் அட்டை பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு

 பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க, மண்டல அளவில் சிறப்பு முகாம்களை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், புதிதாக துவங்கப்பட்ட பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள், கடந்த ஆண்டுகளி
ல் விடுப்பட்ட பள்ளிகள், புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை, 'பள்ளி தகவல் மேலாண்மை இணையதளத்தில்' பதிவு செய்யும் பணியை, வரும் 31ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் சுய விபரம், பெற்றோரது போன் எண், எடை, உயரம் அனைத்தும் பள்ளிகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில், மாணவர்களின் ஆதார் எண் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான மாணவர்களிடமே, ஆதார் அடையாள அட்டை உள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆதார் உள்ள மாணவர்கள், ஆதார் இல்லாத மாணவர்கள் என்ற பிரிக்கப்பட்டு. ஆதார் இல்லாத மாணவர்களின் விபரம், மின்னஞ்சல் மூலம் உடனடியாக அனுப்பப்படவுள்ளது.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று, மண்டல அளவில், பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி, ஆதார் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில், 90 சதவீத விபரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆதார் அட்டை இல்லாத மாணவர்களின் விபரங்கள் அனைத்து பள்ளிகளிலும், சேகரிக்கப்பட்டு, தொகுப்பு பணி நடந்து வருகிறது. விரைவில், மண்டல ஆதார் வினியோக சிறப்பு முகாம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.