பள்ளியில் புகுந்து தாக்குதல்: அடியாட்களை ஏவிய தொழிலதிபர் கைது

சென்னை கோடம்பாக்கம் லயோலா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 8–ம் வகுப்பு படிக்கும் மாணவரை அடித்ததாக, அந்த பள்ளியின் ஆசிரியர் பாஸ்கர் ராஜ் என்பவர் மீது புகார் கூறப்பட்டது.
இதையொட்டி, ஆசிரியர் பாஸ்கர்ராஜும் தாக்கப்பட்டார். மாணவரின் தந்தை தொழிலதிபர் அருளானந்தம், அடியாட்களை ஏவி ஆசிரியரை தாக்கியதாக கோடம்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் பாஸ்கர்ராஜை தாக்கியதாக 35 பேரை கைது செய்தனர்.
தொழிலதிபர் அருளானந்தம் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய வலியுறுத்தி கோடம்பாக்கத்தில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார், தேனாம்பேட்டை உதவி கமிஷனர் சிவபாஸ்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தொழிலதிபர் அருளானந்தத்தை கைது செய்ய, திருச்சி மற்றும் மதுரையில் முகாமிட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்றிரவு 10 மணியளவில் திருச்சியில் வைத்து தொழிலதிபர் அருளானந்தம் கைது செய்யப்பட்டார். இன்று (திங்கட்கிழமை) காலையில் அவர் சென்னைக்கு கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.