அரசு பள்ளிகளில் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக நியமிக்க உத்தரவு


அரசு பள்ளிகளில் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்கள் 652 காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்பும் பொறுப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பள்ளிக்கல்வித்துறை ஒப்படைத்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்க சற்று காலதாமதம் ஆகும். இதைத்தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு உடனடியாக ரூ.4 ஆயிரம் மாதச்சம்பளத்தில் (தொகுப்பூதியத்தில்) 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை பிறப்பித்துள்ளார்.
அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:–
ரூ.4 ஆயிரம் சம்பளத்தில்... கம்ப்யூட்டர் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்ந்து எடுத்து அவர்கள் பணியில் சேரும் வரை ரூ.4 ஆயிரம் தொகுப்பூதிய சம்பளத்தில் தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்காலிகமாக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.