டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: தமிழகம் முழுவதும் 10½ லட்சம் பேர் எழுதினர்: வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் கருத்து


சென்னை,

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை தமிழகம் முழுவதும் 10½ லட்சம் பேர் எழுதினர். வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் கருத்து தெரிவித்தனர்.

குரூப்-4 தேர்வு

தமிழக அரசு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர், வரித்தண்டலர் உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய 4,963 காலி பணியிடங்களை குரூப்-4 தேர்வு மூலம் நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் குரூப்-4 எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது. நேர்முக தேர்வு இல்லாமல் கல்வி மற்றும் தொழில்நுட்ப சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த உடனே வேலை கிடைத்துவிடும் என்பதால் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வு மையத்தில் ஆய்வு

இதற்கான தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் 4,448 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 263 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத வருபவர்களுக்கு சிறப்பு பஸ்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையத்தின் உள்ளே செல்போன், கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்பட்டது. எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் பள்ளி தேர்வு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) சுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விடைத்தாள் திருத்தும் பணி

இதனைத்தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 12 லட்சத்து 72 ஆயிரத்து 293 பேர் குரூப்-4 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதற்காக மொத்தம் 4,448 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள், நடமாடும் குழுக்கள், பறக்கும் படை என தேர்வு எழுதுபவர்களை கண்காணிப்பதற்காக 72,551 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

குரூப்-4 தேர்வு முடிவுகள் 2 மாதத்துக்குள் வெளியிடப்படும். இத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடை (கீ ஆன்சர்) ஒருவாரத்திற்குள் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். ஆகையால் முறைகேடுகள் நடந்துவிடுமோ? என்று யாரும் அச்சப்படவேண்டாம்.

குரூப்-1 தேர்வு முடிவு

குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும். இதேபோன்று குரூப்-2 தேர்வுக்கான கலந்தாய்வு இந்த மாதம் 29-ந்தேதியும், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான கலந்தாய்வு வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதியும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற குரூப்-4 தேர்வில் 10 லட்சத்து 68 ஆயிரத்து 726 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். பல்வேறு காரணங்களுக்காக 2 லட்சத்து 3 ஆயிரத்து 567 பேர் தேர்வு எழுத வரவில்லை.

எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் குரூப்-4 தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த சென்னை அமைந்தகரையை சேர்ந்த குடும்ப தலைவி மெஹ்ராஜ் பேகம் கூறுகையில், கணிதம், பொதுஅறிவு, அறிவியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிமையாக இருந்தது. ‘தினத்தந்தி’யில் வெளியாகிய குரூப்-4 வினா-விடையை இடைவிடாமல் தொடர்ந்து படித்து வந்தேன்.

இதனால் எனக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ‘தினத்தந்தி’ மாதிரி வினா-விடையில் குறிப்பிடப்பட்ட சில வினாக்கள் மாறாமல் அப்படியே கேட்கப்பட்டிருந்தது. நான் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

வினாக்கள் எளிதாக இருந்தது

இதேபோன்று பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பழனி என்ற மாற்றுத்திறனாளி, தனியார் கம்பெனி ஊழியர்கள் சத்யா, மைதிலி ஆகியோர் கூறுகையில், கணிதத்தில் இருந்து பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. தமிழ் இலக்கியம், பொது அறிவு தொடர்பான வினாக்களும் எளிமையாகவே இருந்தது.

வேதியியல், இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து மிகவும் குறைவாக சொற்ப வினாக்களே கேட்கப்பட்டிருந்தன. தேர்வு எளிதாக இருந்ததால் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.