ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் 18–ந்தேதி விண்ணில் ஏவ திட்டம் இறுதிக்கட்ட பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரம்


சென்னை,
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் 18–ந்தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பி.எஸ்.எல்.வி, மற்றும் ஜி.எஸ்.எல்.வி. என்ற 2 வகை ராக்கெட்டுகளை இந்திய தொழில்நுட்பத்தில் வடிவமைத்து அதன்மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன்மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் சாதனைகளை படைத்து வருகிறது.
தற்போது மனிதனை விண்ணுக்கு பாதுகாப்பாக அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் வகையில் அடுத்த தலைமுறைக்கான ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 எனப்படும் ‘எல்.வி.எம். 3–எக்ஸ்’ என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர்.
18–ந்தேதி செலுத்த திட்டம் 630 டன் எடை கொண்ட இந்த ராக்கெட்டின் மேல்பகுதியில், 3 பேரை ஏற்றிச் செல்லும் வகையில் ‘கப் கேக்’ வடிவிலான ஒரு அறையை உருவாக்கி உள்ளனர்.
இந்த ராக்கெட்டை வருகிற 18–ந்தேதி அதிகாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான இறுதிக்கட்ட பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
கவுண்ட்டவுன் இதற்கான கவுண்ட்டவுன் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த ராக்கெட் செலுத்தப்பட்ட 25–வது நிமிடத்தில் வங்காளவிரிகுடா கடல் பகுதியில் விழும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதனை கடலில் இருந்து மீட்டு மீண்டும் இஸ்ரோவிடம் வழங்கும் பொறுப்பு இந்திய கடற்படையிடம் பணிக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் அனுப்பப்பட்டு பத்திரமாக திரும்பிவந்தால் அடுத்த முயற்சியாக மனிதனை வைத்து அனுப்புவதற்கான தொழில்நுட்பத்தை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.