ரஷியாவில் நடைபெற்ற உலக ரோபோட் போட்டியில் சென்னை மாணவர்களுக்கு 2-வது பரிசு

ரஷியாவில் நடைபெற்ற உலக ரோபோட் போட்டியில் சென்னை மாணவர்கள் 2-வது பரிசு பெற்றனர்.

சென்னை மாணவர்கள்

கடந்த 11 வருடங்களாக ரஷியாவில் உலக அளவிலான ரோபோட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ரஷியாவில் உள்ள கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றின் சார்பில் இந்த வருடம் கடந்த மாதம் ரஷியாவில் உள்ள சோச்சி ஒலிம்பிக் கிராமத்தில் போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் 62 நாடுகளைச் சேர்ந்த 367 அணிகள் கலந்துகொண்டன. போட்டி 12 வயதுக்கு உட்பட்டவர்கள், 13 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள், 17 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று 3 பிரிவாக நடத்தப்பட்டது.

இதில் 13 வயது முதல் 16 வயது பிரிவில் இந்தியாவில் இருந்து 15 அணிகள் கலந்துகொண்டன. அதில் ஒரு அணி சென்னையைச் சேர்ந்தது. அந்த அணியில் அடையாறு செயிண்ட் மைக்கேல்ஸ் அகாடமி பள்ளியில் 9-வது வகுப்பு படிக்கும் மாணவர் ஆரோக் ஜோ, வேளச்சேரி அக்ஷயா பள்ளியில் 10-வது வகுப்பு படிக்கும் மாணவர் மோதேஷ்வர், வேளச்சேரி டி.ஏ.வி.பப்ளிக் பள்ளியில் 9-வது வகுப்பு படிக்கும் மாணவர் சிவமாணிக்கம் ஆகிய 3 மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த 3 மாணவர்களும் ரஷியாவில் நடைபெற்ற ரோபோட் போட்டியில் கலந்துகொண்டு 2-வது பரிசை பெற்றனர்.

அவர்கள் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

செவ்வாய்க்கிரகம்

நாங்கள் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணினோம். 3 பேரும் சென்னையில் உள்ள டெக்னாலஜி எஜூகேசன் என்ற நிறுவனத்தில் சேர்ந்து ரோபோட்டிக் பயிற்சி பெற்று வருகிறோம். பயிற்சியை அந்த நிறுவனத்தை சேர்ந்த காட்வின் வர்கீஷ் உள்பட பலர் எங்களுக்கு அளித்து வருகிறார்கள்.

ரஷியாவில் நடந்த போட்டியில் முதல் பரிசை ஜப்பான் மாணவர்கள் பெற்றனர். நாங்கள் 2-வது பரிசை பெற்றோம். இந்த போட்டியில் நாங்கள் உருவாக்கிய ரோபோட், செவ்வாய்க்கிரகத்தில் திடப்பொருள், திரவப்பொருள், வாயுப்பொருள் ஆகியவற்றை மாதிரிகளாக சேகரிக்கும் திறன்கொண்டது. கரடு முரடான செவ்வாய்க்கிரகத்தின் தரை பரப்புக்கு உகந்த சக்கரங்களை ரோபோட்டில் பயன்படுத்தி உள்ளோம்.

காற்றாலை மின்சாரம்

மேலும் செவ்வாய்க்கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர்கள் இயங்க சூரிய ஒளிதேவைப்படுகிறது. எனவே இருளான பகுதிகளுக்குள் ரோவர் செல்வதற்கு தீர்வாக காற்றாலை சக்தியையும் கூடுதலாக பயன்படுத்தி உள்ளோம். அதனால் ரோபோட் தங்குதடையின்றி செவ்வாய்க்கிரகத்தில் செயல்படும்.

பூமிக்கும், செவ்வாய்க்கிரகத்திற்கும் இடையே சிக்னல் அனுப்புவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்த்து ரோபோட்டை தானாக செயல்படுத்தி காண்பித்தோம். பரிசு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறோம்.

இவ்வாறு அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.