எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர் தேர்ச்சியை அதிகரிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் 10ம் வகுப்பிலும், 12ம் வகுப்பிலும் தேர்ச்சி விகிதம்
அதிகரித்து வருகிறது. 100க்கு 100 தேர்ச்சி பல பள்ளிகளிலும் எடுத்து
வருகின்றனர். பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் அதிக
தேர்ச்சி பெறுகின்றன.
ஆனால் இன்னமும் சில மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம், பின்தங்கிய நிலைமைதான்
உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ச்சி சதவீதத்தில் சராசரியில்
பின்தங்கியுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
சராசரி தேர்ச்சி சதவீதத்திற்கும் குறைவான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்
தனியே கூட்டம் நடத்தி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திட நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
ஆண்டு தொடக்கம் முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு நடைபெறும் தேர்வுகளில்
தேர்ச்சி பெறாத மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் தனி
பயிற்சி அளித்து வந்தால் படிப்படியாக பெரும்பாலான மாணவர்களும் அனைத்து
பாடங்களிலும் தேர்ச்சி பெறுவர். அரையாண்டு தேர்வு தர அட்டை வழங்கிய பிறகும்
சில மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களையும் இனங்கண்டு தனிப்பயிற்சி
அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.