பிளஸ் 2 மாணவர்களுக்கான தட்டச்சுத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த வேண்டும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

பிளஸ் 2 தொழில்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கான தட்டச்சுத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.


                வணிகவியல், கணக்குப் பதிவியல், அலுவலக மேலாண்மை, தட்டச்சு செய்முறை ஆகியவை அலுவலக செயலாண்மை (ஆபிஸ் செகரெட்டரிஷிப்) பிரிவில் வழங்கப்பட்டு வந்தன.

இதில் தட்டச்சு செய்முறைத் தேர்வு எழுத்துத் தேர்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்டு வருகிறது. பிற தேர்வுகளைப் போல் இல்லாமல், இந்தத் தேர்வு, தட்டச்சு இயந்திரங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்களை பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால், பிற பாடங்களுக்கான விடைத்தாள் கட்டுகள் பெறப்பட்ட பிறகும் கூட, தட்டச்சுத் தேர்வு விடைத்தாள்களைப் பெற முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, இந்தத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதனடிப்படையில், தட்டச்சுத் தேர்வை, பிற செய்முறைத் தேர்வுகளோடு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவிட்டுள்ளார்.

பிற தொழிற்கல்வி பாடங்களின் செய்முறைத் தேர்வுகள் போலவே, இந்தப் பாடப்பிரிவுக்கும் வினாத்தாள் அமைத்து 200 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்த வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.