பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு

நாடு தழுவிய அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை குறைப்பை அறிவித்துள்ளன. உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப, இந்த விலை குறைப்பு மாறுபடும். அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.11, டீசல் விலை ரூ.2.15 குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்துள்ளதால், இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தற்போது பெட்ரோல் விலை குறைக்கப்படுவது இது 8-வது முறை என்பது கவனிக்கத்தக்கது.
நகரம் வாரியாக பெட்ரோல் விலைக் குறைப்பு விவரம்:
சென்னையில் லிட்டர் ரூ.66.05 என்பது ரூ.2.11 குறைந்து லிட்டர் 63.94 ஆகிறது.
டெல்லியில் லிட்டர் ரூ.63.33 என்பது ரூ.2.00 குறைந்து லிட்டர் ரூ.61.33 ஆகிறது.
கொல்கத்தாவில் ரூ.70.73 என்பது ரூ.2.08 குறைந்து லிட்டர் ரூ.68.65 ஆகிறது.
மும்பையில் ரூ.70.95 என்பது ரூ.2.09 குறைந்து ரூ.68.86 ஆகிறது.
நகரம் வாரியாக டீசல் விலைக் குறைப்பு விவரம்:
சென்னையில் ரூ.55.93 என்பது ரூ.2.15 குறைந்து ரூ.53.78 ஆகிறது.
டெல்லியில் ரூ.52.51 ஆக இருந்த விலை ரூ.2.00 குறைந்து ரூ.50.51 ஆகிறது.
கொல்கத்தாவில் ரூ.57.08 ஆக இருந்த விலை லிட்டருக்கு ரூ.2.08 குறைந்து ரூ.55.00 ஆகிறது.
மும்பையில் ரூ.60.11 ஆக இருந்த விலை லிட்டருக்கு ரூ.2.20 குறைந்து 57.91 ஆகிறது.