29ம் தேதி முதல் அரசு பஸ்கள் ஓடுமா: ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து அறிவித்துள்ளதால், வரும், 29ம் தேதி முதல், அரசு பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனமான, போக்குவரத்து கழகங்களில், 1.43 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு, ஒரு முறை ஊதிய உயர்வு உட்பட பல்வேறு
சலுகைகளுக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது.இந்த ஒப்பந்தம், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்தது. 12வது ஊதிய ஒப்பந்தம் குறித்து, பேச்சு வார்த்தை நடத்தவில்லை. இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.பேச்சு வார்த்தையை துவங்கக் கோரி, 11 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மண்டல வாரியாக பல போராட்டங்களை நடத்தி வருகின்றன.

டிசம்பர், 2ம் தேதி திருச்சியில் நடந்த கூட்டத்தில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு எடுத்தனர். போக்குவரத்து கழக அதிகாரிகளிடம், வேலை நிறுத்த, 'நோட்டீஸ்' வழங்கினர்.சென்னையில், நேற்று மாலை, அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து ஆலோசித்தனர். வரும், 29ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு எடுத்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலர் ஆறுமுக நயினார் கூறியதாவது:ஊதிய ஒப்பந்தம், நிலுவைத் தொகை தொடர்பாக, எங்களின் எந்த கோரிக்கைக்கும் அரசு செவி சாய்க்கவில்லை.வேலை நிறுத்த, 'நோட்டீஸ்' வழங்கியும், அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. எனவே, வரும், 29ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.