குரூப்-1 தேர்வு அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்

சென்னை,

காவல்துறையில் அதிகாரிகள் பணியிடங்கள் அதிகம் காலியாக இருப்பதால், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது என்று
சென்னையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் நேற்று கூறினார்.

குரூப்-2 தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (தொகுதி-2-அ) அடங்கியுள்ள 2 ஆயிரத்து 760 காலி பணியிடங்களுக்கு (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி எழுத்து தேர்வு நடந்தது. வெற்றிபெற்றவர்களின் தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் கடந்த 12-ந்தேதி வெளியிடப்பட்டு, கடந்த 29-ந்தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடங்கியது. இதில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கான துறை ஒதுக்கீடு ஆணை சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேற்று வழங்கப்பட்டது.

தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் முதல் 10 இடங்களை பிடித்த ரெங்கநாதன் வெங்கட்ராமன், ஆர்.சிந்தியா, என்.ஆர்.ஜே.தினேஷ்குமார், ஜி.மகேஷ்வரி, ஜே.முகமது மீரா சாகிப், எம்.மைமூன்கனி, எப்.ஜே.அஸ்வினி, எஸ்.ராஜ்குமார், ஏ.சையத் அசார் அரபாத், எஸ்.ரம்யா ஆகியோருக்கு துறை ஒதுக்கீடு ஆணையை வழங்கினார். இதில் மகேஸ்வரி பி.எஸ்.சி, பட்டதாரி மற்ற அனைவரும் பொறியியல் பட்டதாரிகளாவார்கள். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, செயலாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:-

பொறியாளர்கள் சாதனை

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை பெற்று, தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக குரூப்-2-அ தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு நேற்று துறை ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் 9 பேர் பொறியியல் பட்டதாரிகள்.

தொடர்ந்து 2 ஆயிரத்து 200 விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 200 விண்ணப்பதாரர்கள் சிறப்பு ஒதுக்கீட்டு தரவரிசையின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தினசரி 200 பேர் வீதம் வரும் ஜனவரி 23-ந்தேதி வரை அனைவரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்-ஆப் மார்க் முறையில் இல்லாமல் ரேங்க் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

15 நாளில் தேர்வு முடிவுகள்

தலைமைச்செயலகம், சட்டப்பேரவை செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆகிய துறைகளில் காலியாக உள்ள நேர்முக எழுத்தர் பதவிக்கு 108 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட கலந்தாய்வின் போது தலைமைச்செயலகம், சட்டப்பேரவை செயலகம், பதிவுத்துறை, வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறை போன்ற 29 துறைகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 760 பணியிடங்களில், 2 ஆயிரத்து 668 உதவியாளர், கணக்காளர், கீழ்நிலை எழுத்தர் பணியிடங்களும், 92 நேர்முக எழுத்தர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

குரூப்-1 தேர்வின் ஆரம்பகட்ட தேர்வு முடிவுகள் வரும் 15 நாள்களிலும், குரூப்-4 தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் குரூப்-1 மெயின் தேர்வு நடத்தப்பட உள்ளது. 2015-ம் ஆண்டுக்கான செயல்திட்டம் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. காவல் துறையில் அதிகாரிகள் பணியிடம் அதிகம் காலியாக உள்ளது. இவற்றை நிரப்பவும் மற்ற துறை அதிகாரிகள் பணியிடங்களையும் நிரப்புவதற்காக, குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜனவரியில் வெளியாகிறது. இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

பத்திரப்பதிவு துறை தேர்வு

முதலிடத்தை பிடித்த டி.ரெங்கநாதன் வெங்கட்ராமன் கூறியதாவது:-

பெற்றோர்களின் ஆதரவும், மேயர் சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் பேரில் தான் மாநிலத்தில் முதலிடத்தை பெற முடிந்தது. பொறியியல் பட்டதாரியான நான், குரூப்-2 தேர்வுக்காக தினசரி 10 மணிநேரம் படித்து தேர்ச்சி பெற்றுள்ளேன். பத்திரப்பதிவு துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

2-வது இடத்தை பிடித்த மதுரை பசுமலையைச் சேர்ந்த ஆர்.சிந்தியா கூறியதாவது:-

பொறியியல் பட்டதாரியான நான், குரூப்-1, குரூப்-2-அ தேர்வுகள் எழுதி உள்ளேன். இதில் குரூப்-2-அ தேர்வில் மாநிலத்தில் 2-வது இடத்தை பிடித்துள்ளேன். மகிழ்ச்சியை தரும் இந்த வெற்றிக்கு பின்னால் என்னுடைய பெற்றோரும், வழிகாட்டிய கல்வி நிறுவனத்துக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியின் மூலம் பத்திரப்பதிவு துறையை தேர்வு செய்தாலும், குரூப்-1 தேர்வு முடிவு வெளியான பிறகு தான் எந்த பணியில் சேர்வது என்று தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.