ஜிசாட்-16 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா

ஜிசாட்-16 செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. | படம்: இஸ்ரோ வலைதளத்தின் ஸ்க்ரீன் ஷாட்.
தொலைத்தொடர்பு வசதியை மேம்படுத்த வகை செய்யும் இந்தியாவின் ஜிசாட்-16 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) தயாரித்துள்ள இந்த செயற்கைக்கோள், மோசமான வானிலை காரணமாக, இரண்டு நாட்கள் தாமதமாக செலுத்தப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்சு கயானா நகரில் கவுரூ ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏரியான் 5விஏ221 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
12 ஆண்டுகள் செயல்படும் ஜிசாட்-16 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு புவிநிலை மாற்று சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்ட பிறகு, கர்நாடக மாநிலம், ஹாசனில் உள்ள இஸ்ரோவின் தலைமை அலுவலகத்துக்கு கட்டுப்பாட்டு சமிக்ஞைகள் கிடைத்தன.
இந்த மையத்தில் இருந்து செயற்கைக்கோளில் புவி நிலையை உயர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புவிநிலை சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள், ஆண்டெனாக்கள் இயக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3,181.6 கிலோ எடை கொண்ட ஜிசாட்-16 செயற்கைக்கோளில் மொத்தம் 48 தகவல் தொடர்பு டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை இஸ்ரோ தயாரிப்பில் உருவான செயற்கைக்கோள்களில், ஜிசாட்-16 மட்டுமே அதிக எண்ணிக்கையிலான டிரான்ஸ்பாண்டர்களை விண்ணுக்குச் சுமந்து சென்றுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள 46 டிரான்ஸ்பாண்டர்களின் உதவியால் தொலைக்காட்சி, வானொலி சேவைகள், பெரிய அளவிலான இணையப் பயன்பாடு, தொலைபேசி இயக்கங்கள் மேம்படும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.
சுமார் ரூ.880 கோடி செலவிலான ஜிசாட்-16 செயற்கைக்கோளுடன் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ்லாரல் தயாரித்துள்ள டைரக்ட்-14 என்ற செயற்கைக்கோளையும் ஏரியான் 5 ராக்கெட் விண்ணில் செலுத்தியது. இந்த டைரக்ட்-14 செயற்கைக்கோள், அமெரிக்காவில் நேரடியாக வீட்டுக்குத் தொலைக்காட்சி சேவையை வழங்கப் பயன்படுத்தப்படும்.
ஜிசாட் 16-ஐயும் சேர்த்து இஸ்ரோவுக்காக 18 செயற்கைக்கோளை ஏரியான் ராக்கெட் விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.