10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்

கோவை : மாநிலம் முழுவதும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை எக்காரணங்கள் கொண்டும், பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19 முதல் ஏப்., 10 வரை நடக்கிறது. இத்தேர்வில், பங்கேற்கவுள்ள மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கும் பணி, தற்போது மாநிலம் முழுவதும் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, பள்ளிக்கல்வித்துறையால், வழங்கப்பட்ட புதிய சாப்ட்வேர் பயன்படுத்தி, மாணவர்களின் பெயர்கள், 'ஆப்-லைன்'ல் பதிவு செய்யும் பணிகள், நடந்து வருகின்றன.ஆப்-லைனில் பதிவு செய்யும் பணிகள், வரும் 24ம் தேதி மாலைக்குள் நிறைவு செய்து, ஆன்-லைனில் ஜன., 2 முதல் ஜன., 6க்குள் முடிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர் பட்டியலில் தவறுகள், பிழைகள் இருப்பின் தலைமையாசிரியர்களே, முழுபொறுப்பை ஏற்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் விவரங்களை, www.tnge.in என்ற இணையதளத்தில், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள, யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி ஆன்-லைனில் பதிவு செய்துகொள்ளவேண்டும். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட, பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலகத்தில், யூசர் ஐ.டி., பாஸ்வோர்டு பெற்றுக்கொள்ளலாம். ஆன்-லைனில் விவரம் பதிவேற்றம் செய்யும் பணிகளை, பிரவுசிங் சென்டர்களில் எக்காரணங்களை கொண்டும் மேற்கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், மாணவர்களின் பட்டியல் ஆப்-லைனில் பதிவேற்றும் பணி, 90 சதவீதம் முடிந்துள்ளதாகவும், ஆன்-லைன் பணிகளை மேற்கொள்ள தயார்நிலையில் இருக்குமாறும், தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.