ஜன., 1ம் தேதி முதல் காஸ் சிலிண்டர் மானியம் அமலாகிறது: 27 மாவட்டங்களில் செயல்படுத்த திட்டம்

பெங்களூரு: சமையல் காஸ் சிலிண்டருக்கு, மானிய தொகை வழங்கும் நேரடி பணப் பரிமாற்ற திட்டம், ஜன., 1ம் தேதி முதல், பெங்களூரு உட்பட, 27 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் துவங்கிய பின், வாடிக்கையாளர்கள், மார்க்கெட் விலையை செலுத்தி, சமையல் காஸ் சிலிண்டரை பெற்றுக் கொள்ள வேண்டும். மானியத்தொகை, நேரடியாக, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.


நேரடி பண மாற்றம்:

புத்தாண்டின் முதல் நாளிலிருந்தே, பெங்களூரு உட்பட, 27 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மைசூரு, துமகூரு மாவட்டத்தில், கடந்த, நவ., 15ம் தேதியில் இருந்து, நேரடி பண பரிமாற்றம் திட்டம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு, 7.50 லட்சம் பேர், இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மானிய தொகை பெற, ஆதார் எண் கட்டாயமல்ல. வாடிக்கையாளர்கள், தம் வங்கி கணக்கு விவரங்களை, ஏஜன்சிகளிடம் வழங்கினால் போதும்.


மூன்று மாதம் அவகாசம்:

கர்நாடகாவில், இன்டேன், எச்.பி., பி.பி.சி., ஆகிய நிறுவனங்களில், 1.1 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். எல்.பி.ஜி., வாடிக்கையாளர்கள், நேரடி பணப் பரிமாற்றம் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள, மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. ஜன., 1ம் தேதியில் இருந்து, மார்ச் 31க்குள், இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். அதுவரை, மானிய தொகையில் சிலிண்டர் வினியோகம் செய்யப்படும். பின், மார்க்கெட் விலை செலுத்தி, காஸ் சிலிண்டர் பெற்றுக் கொள்ள வேண்டும். எல்.பி.ஜி., வாடிக்கையாளர்கள், தம் வங்கி கணக்கு விவரங்களை, சிலிண்டர் வினியோகம் செய்யும் ஏஜன்சிகளிடம் வழங்க வேண்டும். ஏஜன்சிகள் வழங்கும் நிர்ணயித்த படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக, வாடிக்கையாளர்கள் பணம் எதுவும் செலுத்த தேவையில்லை. வாடிக்கையாளர்கள், ஆதார் எண்ணையும் வழங்கலாம். ஆனால், அது கட்டாயமல்ல. ஏஜன்சிகளிடம் ஆதார் எண்ணை வழங்குபவர்கள், வங்கிக்கும், அதன் விவரங்களை தெரிவிக்க வேண்டும். வரும், 2015 மார்ச் 31ம் தேதிக்குள், வங்கி கணக்கு விவரத்தை சிலிண்டர் ஏன்சிகளிடம் தெரிவிக்க சாத்தியமாகாதவர்கள், கவலைப்பட தேவையில்லை. தம் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க, ஜூன் 30ம் தேதி வரை நேரம் உள்ளது.


மார்கெட் விலை:

இதற்கு, 'பார்க்கிங் பிரீயட்' என்று பெயர். இந்த காலத்தில் மானிய விலையில் சிலிண்டர் கிடைக்காது. மார்க்கெட் விலையை செலுத்தி, பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு, ஜூன் 30க்குள், வங்கி கணக்கை சிலிண்டர் வினியோகம் செய்யும் ஏஜன்சிகளிடம் வழங்கி, நேரடி பணபரிமாற்றத் திட்டத்தில் இணைத்தால், மார்க்கெட் விலையில், எத்தனை சிலிண்டர்கள் வாங்கப்பட்டனவோ, அந்தளவு மானிய தொகை, ஒரே நேரத்தில், வாடிக்கையாளர் கணக்கில் செலுத்தப்படும். நிர்ணயித்த கால கெடுவுக்குள், வங்கி கணக்கு விவரங்களை இணைக்காவிட்டால், மானிய தொகை கிடைக்காது. வங்கி கணக்கு விவரத்தை, எல்.பி.ஜி., சிலிண்டர் வினியோக ஏஜன்சிகளுக்கு தாக்கல் செய்த வாடிக்கையாளர்களின் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். அதன் பின், மானிய தொகை செலுத்தப்பட்டது உட்பட, அனைத்து விவரமும் எஸ்.எம்.எஸ்., மூலமாகவே அனுப்பப்படும். எனவே, வாடிக்கையாளர்கள், தங்களது மொபைல் நம்பரை, ஏஜன்சியிடம் தெரிவிப்பது நல்லது என, உணவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.