டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 22

வரலாறு-இந்திய சுதந்திரப் போராட்டம்
636. இந்திய நெப்போலியன் என அழைக்கப்படுபவர் யார்?
637. எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் பாஹியான் இந்தியாவுக்கு வந்தார்?
638. வேதகால மக்களின் முக்கிய தொழில் எது?

639. "ராஜதரங்கிணி" என்ற நூலை எழுதியவர் யார்?
640. இரண்டாம் பானிபட் போர் எப்போது நடந்தது?
641. அலெக்சாண்டர் இந்தியா மீது எந்த ஆண்டு படையெடுத்தார்?
642. நகராட்சி நிர்வாக முறையை கொண்டு வந்த மன்னர் யார்?
643. குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த கணிதம் மற்றும் வான சாஸ்திரி யார்?
644. குதுப்மினாரை நிறுவியவர் யார்?
645. விஜய நகரப்பேரரசு எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?
646. திப்புசுல்தான் ஆட்சி யின் தலைநகரம் எது?
647. சீன நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?
648. குடவோலை முறையை அறிமுகப்படுத்திய மன்னர் யார்?
649. பழங்கால இந்தியாவில் சிறந்து விளங்கிய சட்டமேதை யார்?
650. இரண்டாம் அலெக்சாண்டர் என தனக்குத் பெயர் சூட்டிக்கொண்ட சுல்தான் யார்?
651. தலைக்கோட்டை போரால் அழிந்த பேரரசு எது?
652. செப்பு அடையாள நாணயத்தை அச்சிட்டவர் யார்?
653. முகலாய வம்சத்தில் யாருடைய ஆட்சிக்காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது?
654. மன்சப்தாரி முறையை பின்பற்றியவர் யார்?
655. வடஇந்தியாவின் கடைசி இந்து அரசர் யார்?
விடைகள்
636. சமுத்திர குப்தர் 637. இரண்டாம் சந்திர குப்தர் 638. விவசாயம் 639. கல்ஹனர் 640. கி.பி. 1556 641. கி.மு.326 642. சந்திர குப்த மவுரியர் 643. ஆரியப்பட்டா 644. குத்புதீன் ஐபெக் 645. துங்கபத்ரா 646. ஸ்ரீரங்கப்பட்டினம் 647. ஹோவாங்கோ ஆறு 648. முதலாம் பராந்தக சோழன் 649. மனு 650. அலாவுதீன் கில்ஜி 651. விஜயநகரப் பேரரசு 652. முகமது பின் துக்ளக் 653. ஷாஜகான் 654. அக்பர் 655. ஹர்ஷர்.
வரலாறு பாடங்களை படிப்பது எப்படி?
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறை பொருத்தவரையில், 1857 முதல் 1947 வரையில் என்னென்ன முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன என்பதை காலத்தோடு அட்டவணை தயாரித்து நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணம்:
1857 - வேலூர் சிப்பாய் கலகம் 1885 - இந்திய தேசியகாங்கிரஸ் தோற்றம் 1905 - வங்கப்பிரிவினை, சுதேசி இயக்கம் 1906 - முஸ்லீம் லீக் கட்சி தோற்றம் 1917 - ஆகஸ்ட் அறிக்கை 1920 - ஒத்துழையாமை இயக்கம்
மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய காலம் (1885) முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு தலைமை வகித்த அன்னி பெசன்ட் அம்மையார், திலகர், நேரு, காந்திஜி, நேதாஜி மற்றும் தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களான பாரதியார், திருப்பூர் குமரன், காமராஜர், ராஜாஜி, ஈ.வெ.ரா. முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோர் பற்றி குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். அதைத்தொடர்ந்து, வேலூர் கிளர்ச்சி (1806), சிப்பாய் கலகம் (1857), சூரத் காங்கிரஸ் நிகழ்வுகள், ரவுலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஹண்டர் கமிஷன், இல்பர்ட் சட்டம், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம், இரட்டை ஆட்சிமுறை, அவகாசியிலிக்கொள்கை, ரயத்வாரிமுறை, கிலாபத் இயக்கம், சவுரி சவுரா நிகழ்வு, சுயராஜ்ஜிய கட்சி தோற்றம், சைமன் கமிஷன், 3 வட்ட மேஜை மாநாடுகள், கிரிப்ஸ் தூதுக்குழு, முதல் மற்றும் 2-ம் உலகப்போரில் இந்தியாவின் நிலைப்பாடு, அதன் விளைவுகள், ஒத்துழையாமை இயக்கம், உப்புச்சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், சுதந்திரப் போராட்ட வீரர்களில் மிதவாதிகள், பயங்கரவாதிகள் விவரங்களையும் குறிப்பெடுக்க வேண்டியது அவசியம். அதன்பின்பு சமுதாயச் சீர்திருத்த இயக்கங்களான பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், ராமகிருஷ்ணா, அலிகார் இயக்கங்கள் பற்றிய முழு தகவல்கள். பொதுவாக, அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் இந்தியப்பகுதியில் இருந்துதான் நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன.
மேற்சொன்ன பாடங்களில் புள்ளி விவரங்கள், எந்தெந்த ஆண்டு, எந்தெந்த சம்பவம் நிகழ்ந்தது, பங்கேற்றவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால், இப்பிரிவு தொடர்பான கேள்விகளை குழு விவாதம் (Group Discussion) மூலம் படிப்பது மிகுந்த பயன்தரும். 5 நபர்கள் கொண்ட ஒரு பிரிவில், ஒவ்வொருவரும் ஒரு பாடப்பிரிவை, உதாரணத்துக்கு தமிழகம் பற்றி ஒருசிலரும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் விவரம் குறித்து ஒருவரும், போக்குவரத்து வசதிகள் பற்றி ஒருவரும் நவீனகால இந்தியா தொடர்பாக மற்றொருவரும் இப்படி குழு விவாதம் செய்துகொண்டால் அனைத்துப் பாடங்களும் மனதில் எளிதாக நிற்கும். இந்த முறையை மேற்கொண்டு வெற்றிபெற்றதாக தேர்வில் வெற்றிபெற்ற பலர் தெரிவித்துள்ளனர்.
நெல்லை எம்.சண்முகசுந்தரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)