அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை

அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், எம்.புளியங்குளத்தைச் சேர்ந்த மீனலட்சுமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மனு விவரம்: தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர்கள், உதவியாளர்களை நியமிக்க மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெற்று வருகிறது.
2013 ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியான அரசாணை வழிகாட்டுதல்படி மாவட்ட ஆட்சியர்கள், திட்ட அலுவலர்கள் இதற்கான பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்த நேர்காணல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் நடைபெறவில்லை. சில மாவட்டங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். சில மாவட்டங்களில் நேர்காணல் முடிந்துள்ளது.
இந்தப் பணி நியமனம் தொடர்பாக பொது அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
குறிப்பாக, பணியாளர்கள் காலிப் பணியிடம் எண்ணிக்கை, இட ஒதுக்கீடு விவரம் ஆகியவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. பத்திரிகைகள் மூலம் பொது அறிவிப்பு வெளியிட்டு  இருந்தால்தான் தகுதியுள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
மேலும், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான் இதற்குத் தகுதியுடையவர்கள் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. இந்தப் பணிகளுக்கு யார் யாரை  நியமிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முன்கூட்டியே நிர்ணயிப்பதாகத் தெரிகிறது.
எனவே, இட ஒதுக்கீடு முறை, காலிப் பணியிட எண்ணிக்கை போன்ற விவரங்களுடன் கூடிய பொது அறிவிப்பு வெளியிட்டு, அதன் அடிப்படையில் அங்கன்வாடிப் பணியாளர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு, நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அரசாணை 140, 43 ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இடஒதுக்கீடு முறைப்படியே பணியாளர்கள் நியமிக்க இந்த உத்தரவுகள் வகை செய்கின்றன.
ஒரு பணியிடத்துக்கு 10 மடங்கு வீதம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதால் அரசாணை குறித்த தகவல் மக்களைச் சென்றடைந்துள்ளது என்பது உறுதியாகிறது. மேலும், பணிநியமனம் தொடர்பான அரசாணையை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
மேலும், மனுவுக்கு சமூகநலம், சத்துணவுத் திட்டத் துறைச் செயலர், சமூகநலத் துறை ஆணையர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.