ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
உதவித்தொடக்க கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் தங்கபாசு முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் பழனிக்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ரங்கராஜ், வட்ட கிளை தலைவர் சின்னமாரிமுத்து ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ஏழு சதவீத அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படாததைக் கண்டித்தும், உதவித்தொடக்க கல்வி அலுவலரிடம் ஆசிரியர்களின் கோரிக்கைகளை குறையாக தெரிவித்து கண்டுகொள்ளாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.