அரையாண்டு தேர்வுக்கு முழு பாடத்திட்டத்தில் வினாத்தாள்: அவசரகதியில் வகுப்பை முடிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

நாமக்கல்:வரும், டிசம்பர், 10ம் தேதி துவங்கும் அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள், பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு மாணவருக்கு, முழு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என்பதால், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அவசரகதியில் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.

அறிவுறுத்தல்:பள்ளிக் கல்வித்துறை சார்பில், கடந்த, சில ஆண்டுகளாக, மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வை நடத்துவது போல, ஒரே தேதியில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான, தேர்வு அட்டவணையை, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, கல்வித் துறை அறிவுறுத்தி வருகிறது.மேலும், ஆண்டுதோறும் நடத்தப்படும் இடைத்தேர்வு, திருப்பத்தேர்வு, காலாண்டு, அரையாண்டு, அலகு தேர்வு ஆகியவற்றை அரசுப் பள்ளிகள் போலவே, தனியார் பள்ளிகளும் கட்டாயம் நடத்த வேண்டும். அதற்காக, தனியார் பள்ளிகளிடம் இருந்து, வினாத்தாள் மற்றும் மதிப் பெண் தகுதி சான்று ஆகிய வற்றிற்காக, ஒவ்வொரு மாணவனிடமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

10௦ம் தேதிக்குள்...:ஆனால், சில, தனியார் பள்ளிகள், கல்வித்துறை வழங்கும் கால அட்டவனைப்படி தேர்வை நடத்தாமல், அவர்களுக்கு என தனியாக வினாத்தாள் தயாரித்து, தேர்வுக்கு மாணவரை தயார்படுத்தி வருகின்றன.இந்நிலையில், பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, வரும், டிசம்பர், 10ம் தேதி துவங்கி, 23ம் தேதி முடிகிறது. அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி.,க்கு, வரும், டிசம்பர், 12ம் தேதி துவங்கி, 23ம் தேதி முடிகிறது.இதில், அரையாண்டு தேர்வு வினாத்தாள், பிளஸ் 2 மாணவருக்கு, அவருக்கான முழு பாடத்திட்டத்தில் இருந்தும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவருக்கு, 90 சதவீதம் பாடங்களில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்படும். அதற்காக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பாடத்திட்டங்களை, டிசம்பர், 10ம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும்.ஆனால், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், முழு பாடத்திட்டத்தையும் முடிக்க முடியாமல், அரையாண்டு தேர்வுக்காக அவசரகதியில், பாடங்களை வகுப்பில் எடுத்து வருகின்றனர். இதனால். பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பாடங்களை முழுமையாக கற்க முடியாமல், வரும், மார்ச்சில் துவங்கும் பொதுத்தேர்வுக்கான தேர்வு பயத்தில் உள்ளனர்.

கட்டாயம்:கல்வி அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுவதும், தற்போதைய நிலையில், பிளஸ் 2 மாணவருக்கு பாடம் நடத்த, 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. ரெகுலர் வகுப்பு எடுக்கும் முதுகலை ஆசிரியர், கூடுதல் பொறுப்பாக அருகில் உள்ள பள்ளிக்கு வகுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால், இரண்டு பள்ளி மாணவரையும், முழு தேர்ச்சி அடைய வைக்க முடியவில்லை. அரையாண்டு தேர்வில், முழு பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்பதால், குறித்த நேரத்தில் பாடத்திட்டத்தை முடிக்கவில்லை.

தயார்படுத்த...:சில, பள்ளி ஆசிரியர்கள் ஆர்வமுடன் பணியாற்றாததால், முழு பாடத்திட்டத்தை முடிக்கவில்லை. இதனால், அவரசகதியில் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருப்பது போல், மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடமும் இருக்க வேண்டும். அப்போது தான், அரசுப்பள்ளி மாணவரை, தனியார் பள்ளி மாணவருக்கு இணையாக தயார்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.