அழகிய கையெழுத்து என்பது அனைவருக்கும் அமைவதில்லை. கற்றுக்கொள்ளும்
ஆர்வத்துடன்கூடிய முறையான பயிற்சி இருந்தாலே போதும் அழகாய் எழுதுவது
எல்லோருக்கும் சாத்தியம் என்கிறார், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்
‘கேலிகிராபி’ கையெழுத்துப் பயிற்சி அளிக்கும் பிரசாந்த்குமார்.
பி.காம்., படிக்க வந்த பிரசாந்துக்குக் கல்லூரியில் ‘கேலிகிராபி’
கையெழுத்துப் பயிற்சியாளராக இருந்த பிலிப் மோசக் என்பவர் மூலம் அழகாக
எழுதுவது எப்படி என்பது கைவரப்பெற்றுள்ளது. தொடர்ந்து அவருடைய பயிற்சி
வகுப்புக்குச் சென்றவர், ஒரு கட்டத்தில் சீக்கிரமே அழகாக எழுதக்
கற்றுக்கொண்டதைப் பார்த்த பிலிப் மோசக், பிரசாந்த்தை தனக்கு உதவியாகப்
பகுதி நேரமாக மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கக் கல்லூரி நிர்வாகம் மூலம்
ஏற்பாடு செய்துள்ளார்.
ஆசிரியர்களுக்கும்
அப்போது பிரசாந்துக்குக் கல்லூரியில் காலையில் பாடம் எடுக்கும்
விரிவுரையாளர்கள் சிலர் மதியத்துக்கு மேல் இவரிடம் கையெழுத்துப்
பயிற்சிக்கு வருவார்களாம். எம்.காம். முடித்த கையோடு அதே கல்லூரியில்
முழுநேரமாக ‘கேலிகிராபி’ பயிற்சியாளராக வேலைக்குச் சேர்ந்த பிரசாந்த்,
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர், பேராசிரியர்களும்
மட்டுமின்றி, வெளியிலிருந்து ஆர்வத்துடன் வரும் பள்ளி மாணவர்கள்,
ஆசிரியர்களுக்கும் கற்றுத்தருகிறார்.
இதில் பெரும்பாலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று,
தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், அழகாக எழுதுவது எப்படி என்பது குறித்து
மாணவர்களுக்குப் பகுதிநேர வகுப்பு எடுப்பதைப் பெருமையாகக்
குறிப்பிடுகிறார்.
பிஷப் ஹீபர் கல்லூரியில் ‘கேலிகிராபி’ கையெழுத்துப் பயிற்சி ஒரு நாளைக்கு
நான்கு வகுப்புகளாக நடத்தப்படுகிறது. ஒரு வகுப்புக்கு ஒன்றேகால் மணி நேரம்
எனக் கணக்கிட்டுப் பயிற்சி அளிக்கின்றனர். 250 பேர் வரை பயிற்சிக்கு
வருவதால் பிரசாந்த் தவிர தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நான்கு
பேர் கல்லூரி முடிந்த பின்னர் பகுதிநேரமாக, மாணவர்கள், ஆசிரியர்கள் என
அனைத்துத் தரப்பினருக்கும் பயிற்சி அளிக்கின்றனர்.
ஊக்கத்தொகை
இவர்கள் ஏற்கனவே பிரசாந்த்திடம் கையெழுத்துப் பயிற்சி முடித்துச் சான்றிதழ்
பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பகுதி நேரமாகப் பயிற்சி அளிக்கும்
இந்த நான்கு மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் ஊக்கத்தொகை வழங்குகிறது.
மேலும் இங்குக் கையெழுத்து பயிற்சி முடித்துச் சென்ற சில மாணவர்கள்
திருச்சியில் ஜமால் முகமது மற்றும் காவேரி கல்லூரிகளில் ‘கேலிகிராபி’
பயிற்சி எடுக்கின்றனர். பலர் தனியாகப் பயிற்சி மையங்கள் நடத்தியும்,
வீட்டிலேயே ஆர்வத்துடன் வருபவர்களுக்குப் பயிற்சி அளித்தும் வருமானம்
ஈட்டுகின்றனர்.
இதற்கெனப் பிரத்யேகமான ‘கேலிகிராபி’ பேனா மூலம் பயிற்சி அளிப்பதாகக் கூறும்
பிரசாந்த், எட்டு வகையான எழுத்து வடிவங்களை எழுதப் பயிற்சி அளிப்பதாகவும்,
இதில் கேஷுவல் ரைட்டிங் மற்றும் இட்டாலிக் ரைட்டிங் ஆகிய இரண்டுக்கு
மட்டும் பயிற்சி அளிக்க 25 நாட்கள் ஆகிவிடும் என்கிறார்.
கேலி தந்த வேலை
இவை மட்டுமன்றிப் பயிற்சிக்கு வருபவர்கள் கட்டாயம் வீட்டில் தொடர்ந்து
இரண்டு மணி நேரம் எழுத்துப் பயிற்சி எடுக்க வேண்டுமாம். கல்லூரி ஆரம்ப
நாட்களில் நான் கிறுக்கலாக எழுதுவதைக் கேலி செய்தவர்கள் மத்தியில், அழகாக
எழுத வேண்டும் என்று மனதில் துளிர்விட்ட ஆர்வமே எனக்கு வேலைவாய்ப்பையும்
மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பையும் உருவாக்கித் தந்துள்ளது
என்று பெருமிதம் பொங்கக் கூறுகிறார் பிரசாந்த்.