முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்; பட்டியல் அனுப்ப உத்தரவு

 ஊக்க ஊதியம் பெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குறித்த பட்டியல் அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


             அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், கூடுதல் கல்வி தகுதி பெறும் பட்சத்தில், அவர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்குவது நடைமுறையாக உள்ளது. "இன்சென்டிவ்' எனப்படும் இந்த ஊக்க ஊதியத்தை, தனது பணிகாலத்தில் ஒரு ஆசிரியர், இரண்டு முறை பெறலாம்.முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட்., பட்டம் பெற்றிருந்தால், அதற்கு ஒரு ஊக்க ஊதியமும், எம்.பில்., பி.எச்.டி., போன்ற படிப்பை முடித்திருந்தால் அதற்கு ஒரு ஊக்க ஊதியமும் பெற வாய்ப்பு இருந்தது. முதுகலை பட்டதாரி ஆசிரியராக உள்ளவர்கள், தொலைதூர கல்வி மூலம் எம்.எட்., படித்து முதல் ஊக்க ஊதியத்தை சுலபமாக பெற்றனர். தற்போது, பல பல்கலைகளில் தொலைதூர எம்.எட்., படிப்பு இல்லாததால், பலரும் அதற்கான வாய்ப்பு இழந்துள்ளனர்; எம்.எட்., படிப்போர் குறைந்து விட்டதால் எம்.பில்., - பி.எச்.டி., முடித்தவர்களுக்கு மட்டுமே இனி, இரண்டு வகையான ஊக்க ஊதியத்தையும் வழங்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, எம்.பில்., - பி.எச்.டி., உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களுக்கு மட்டுமே இனி, ஊக்க ஊதியம் வழங்கப்பட உள்ளது. இத்தகைய கல்வித்தகுதி உடைய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலை, மாவட்டம் வாரியாக தயாரித்து அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.